காங்கிரஸ் கட்சியை மக்கள் வலுப்படுத்த வேண்டும் என்று மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 6 ஆண்டுகளாக மக்களை தவறாக வழிநடத்தியுள்ளார் என்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.
நாட்டில் உள்ள இளைஞர்கள், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்ற தவறி விட்டார் என்றும் மன்மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பாக நடத்தப்பட்ட Congress Bharat Bachao Rally பேரணியில் கலந்து கொண்டு மன்மோகன் சிங் பேசியதாவது-
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக மாற்றுவோம், ஜி.டி.பியை உயர்த்துவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை மோடி அளித்தார். ஆனால் அவற்றில் எதையும் நிறைவேற்றவில்லை.
கடந்த 6 ஆண்டுகளாக பொய்யான வாக்குறுதிகளை பிரதமர் மோடி அளித்து மக்களை தவறாக வழிநடத்தியுள்ளார். 2024-ல் இந்திய பொருளாதாரம் 5 ட்ரில்லியனாக உயரும் என்று அவர் கூறியுள்ளார். 5 ஆண்டுகளில் விவசாயிகள் 2 மடங்கு வருமானத்தை பெறுவார்கள் என்றும், புதிதாக 2 கோடி வேலை வாய்ப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுத்தப்படும் என்றும் மோடி கூறியிருந்தார். இது மக்களை தவறாக வழி நடத்தும் செயல்.
சோனியா மற்றும் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியை மக்கள் வலுப்படுத்த வேண்டும். காங்கிரசுக்கு மக்கள் அதிகாரத்தை அளிக்க வேண்டும்.
இந்தப் பேரணியில் சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரும் கட்சியின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மாநில தொண்டர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். இதில், மந்தமான பொருளாதார நிலைமை, அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
முன்னதாக இந்தப் பேரணி கடந்த நவம்பர் 30-ம்தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், குளிர்கால கூட்டத்தொடரை மனதில் வைத்து பேரணி டிசம்பர் 14-க்கு தேதி மாற்றி அமைக்கப்பட்டது.