This Article is From Jan 05, 2019

''மேகதாது விவகாரத்தில் காங்கிரசும், பாஜகவும் தமிழகத்தை வஞ்சித்து விட்டது''- தம்பிதுரை

மேகதாது விவகாரத்தை தொடர்ந்து எழுப்பியதால் தமிழக எம்.பி.க்கள் மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை பேட்டி அளித்துள்ளார்.

''மேகதாது விவகாரத்தில் காங்கிரசும், பாஜகவும் தமிழகத்தை வஞ்சித்து விட்டது''- தம்பிதுரை

மேகதாது விவகாரத்தில் காங்கிரசும், பாஜகவும் சேர்ந்து தமிழகத்தை வஞ்சித்து விட்டதாக மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரம் காட்டியுள்ளது. அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

இந்த நிலையில், மக்களவையில் திமுக மற்றும் அதிமுக எம்.பி.க்கள் மேகதாது பிரச்னையை எழுப்பி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை அலுவல்கள் பாதிப்பு அடைந்தது. இதையடுத்து தமிழக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேகதாது விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

மேகதாது அணை கட்டுவதற்காக காங்கிரசும், பாஜகவும் வரிந்துகொண்டு கர்நாடக அரசுக்கு உதவி செய்கிறது. இருமாநில அரசுகளை அழைத்துப் பேசுவதாக மத்திய அரசு இப்போது கூறுகிறது. இதனை முதலிலே செய்திருக்கலாமே. இதைச் செய்யாமல் எல்லாமே முடித்து விட்ட பின்பு இதை சொல்கிறார்கள். இது கன்னத்தில் அடித்து விட்டு சாரி கேட்பதுபோல் உள்ளது. தமிழகத்தின் நீதிக்காக குரல் கொடுத்தோம். அதற்காக எங்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்.

இவ்வாறு தம்பிதுரை கூறினார்.
 

.