This Article is From Sep 24, 2019

அதிகாரிகள் தவறு செய்யவில்லை என்றால் அமைச்சர் எப்படி தவறு செய்திருப்பார்? மன்மோகன் கேள்வி

கடந்த செப்.5ஆம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேற்று திகார் சிறைக்கு சென்று நேரில் சந்தித்தனர்.

அதிகாரிகள் தவறு செய்யவில்லை என்றால் அமைச்சர் எப்படி தவறு செய்திருப்பார்? மன்மோகன் கேள்வி

ஒரு தனிநபரால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது - மன்மோகன் சிங்

ஹைலைட்ஸ்

  • ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சிதம்பரம் விசாரிக்கப்பட்டு வருகிறார்
  • மன்மோகன் மற்றும் சோனியா திகார் சிறையில் சிதம்பரத்தை சந்தித்தனர்
  • நீதிமன்றங்கள் நீதியை நிலைநாட்டும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்
New Delhi:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை நேற்று சிறையில் சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவர் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், தொலைக்காட்சி நிறுவனமான ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு நிதியை பெற்று தந்தது தொடர்பான ஊழல் வழக்கில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த செப்.5ஆம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேற்று சிறைக்கு சென்று நேரில் சந்தித்தனர். கடந்த வாரம், காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர் சிதம்பரத்தை சந்தித்திருந்தனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிதம்பரத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதை எதிர்க்கட்சி முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் தொடர்ந்து காவலில் இருப்பது வருத்தம் அளிக்கிறது. நமது அரசினுடைய அமைப்பில், ஒரு தனிநபரால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. அனைத்து முடிவுகளும், ஒருங்கிணைந்த முடிவுகள்தான். அரசின் 6 செயலர்கள் உட்பட மொத்தம் 12 அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகுதான் அதை முன்மொழிந்துள்ளனர். ஒருமித்த பரிந்துரைகளின் பேரில் அமைச்சர் ப.சிதம்பரம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த முடிவை பரிந்துரைத்த அதிகாரிகள் தவறு செய்யவில்லை என்றால் முடிவை அனுமதித்த அமைச்சர் மட்டுமே எவ்வாறு தவறு செய்திருப்பார். அத்துடன் அவர் தவறு செய்ததாக எவ்வாறு கருத முடியும்? ஒரு முடிவை அனுமதித்ததற்கு அமைச்சர் மட்டும் காரணம் என்றால் மொத்த அரசாங்க முறையும் சரிந்துவிடும். இந்த வழக்கில் நீதிமன்றங்கள் நீதியை நிலைநாட்டும் என்று நாங்கள் மிகுந்த மன உறுதியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.  

முன்னதாக, கடந்த 2007 ஆம் ஆண்டு ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திரானி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம். இந்த இருவரும் மகள் ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள். இந்த இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை, சிறையில் இருந்தபடியே ப.சிதம்பரம், தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
 

.