This Article is From Jun 05, 2020

ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி, அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு!

ஜெ.அன்பழகனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ரெலாவிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி, அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு!

ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி, அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு!

ஹைலைட்ஸ்

  • ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி நலம் விசாரிப்பு
  • அரசு சார்பாக எந்த உதவிகளையும் செய்ய தயார் எனவும் உறுதி
  • அமைச்சர் விஜயபாஸ்கரும் நேரில் சென்று நலம் விசாரிப்பு

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் முதல்வர் பழனிசாமி தொலைபேசி மூலம் கேட்டறிந்துள்ளார். 

ஜெ.அன்பழகன் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ஆவார். 61 வயதாகும் இவர் கடும் மூச்சுத் திணறல் காரணமாக, குரோம்பேட்டை அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று மாலை மருத்துவமனை தரப்பில் அன்பழகனின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. 

அதில், 02-06-2016 அன்று ஜெ.அன்பழகன் குரோம்பேட்டை ரிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு சாதாரண நிலையில் ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவருக்கு 80 சதவீத ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணிநேரமாக ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வென்டிலேட்டர் மூலம் 80% ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில், 67% மட்டுமே இன்று தேவைப்படுகிறது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, ஜெ.அன்பழகனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ரெலாவிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அரசு சார்பாக எந்த உதவிகளையும் செய்ய தயார் எனவும் உறுதி அளித்துள்ளார். அதே போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சென்னை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். 

.