This Article is From Dec 12, 2019

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Citizenship (Amendment) Bill (CAB): குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக முதலாவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியே அறிவித்தது.

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

அரசியலமைப்பை மீறுவதாக உள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாதிட உள்ளது.

New Delhi:

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 99 வாக்குகளும் பதிவாகின.  

முன்னதாக, நாடாளுமன்ற மக்களவையில், ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ள நிலையில், இந்த மசோதா நேற்று முன்தினம் அங்கு தாக்கல் செய்யப்பட்டு எளிதாக நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் விழுந்தன.

இதனிடையே, குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாகாலாந்து, அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அசாம் மாநிலத்தில் போராட்டம் தீவிரமடைந்து வன்முறையை ஏற்படுத்தும் வகையில் கவுஹாத்தி, திஸ்பூர் உள்ளிட்ட பல பகுதிகளின் சாலைகளில் டயர்களை தீயிட்டு எரித்தும், வாகனங்களை அடித்து நொறுக்கியும், சாலை மறியலிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்

மசோதா குறித்து மாநிலங்களவையில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், குடியுரிமை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருக்கக் கூடாது. குடியுரிமை மசோதா சட்ட நிபுணர்களின் ஆலோசனையின்றி உருவாக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல் என்று கூறியிருந்தார். 

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களைவையிலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றிய நிலையில், குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

.