This Article is From Dec 13, 2019

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த திங்கள்கிழமையன்று மக்களவையில் நிறைவேறிய நிலையில், புதன்கிழமையன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசிதழில் இடம்பெற்று அமலுக்கு வந்தது.

New Delhi:

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, உடனடியாக அச்சட்டம் அமலுக்கு வந்தது. 

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு மசோதாவைக் கொண்டு வந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இதனிடையே, குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாகாலாந்து, அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அசாம் மாநிலத்தில் போராட்டம் தீவிரமடைந்து வன்முறையை ஏற்படுத்தும் வகையில் கவுஹாத்தி, திஸ்பூர் உள்ளிட்ட பல பகுதிகளின் சாலைகளில் டயர்களை தீயிட்டு எரித்தும், வாகனங்களை அடித்து நொறுக்கியும், சாலை மறியலிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்

இதனால், அசாமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தடை உத்தரவை மீறி நேற்றும் அசாமில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனிடையே, போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதார். இதையடுத்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், பௌவுத்தர்கள் மற்றும் சீக்கியர்கள், பார்சி, ஜெயின்ஸ், கிறிஸ்துவர்கள் ஆகியோர் 31 டிசம்பர் 2014ல் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிவர்கள் என்று கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

இதனிடையே, அசாம் மக்களுக்கு உறுதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, குடியுரிமை மசோதா குறித்து அசாம் மாநிலத்தில் உள்ள எனது சகோதர, சகோதரிகள் கவலை கொள்ள வேண்டாம். 

உங்களின் உரிமைகள், தனித்துவமான அடையாளம், அழகான கலாசாரத்தை யாரும் பறிக்க முடியாது. அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6ன் படி மாநில மக்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் நில உரிமைகளை அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்க மத்திய அரசும், நானும் முற்றிலும் கடமைப்பட்டுள்ளோம் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். 

இந்த புதிய சட்டத்தை குடிமக்கள் தேசிய பதிவேடு பின்பற்றும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதாவது முஸ்லிம்கள் குறிப்பிட்ட அந்த மூன்று நாடுகளிலிருந்து வந்த அகதிகள் அல்ல என்பதையும், இந்தியாவின் பூர்விக குடியிருப்பாளர்கள் என்பதையும் நிரூபிக்க வேண்டும். சட்டத்திருத்தத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பிற மதங்களின் உறுப்பினர்கள் இதற்கு மாறாக, குடியுரிமைக்கான தெளிவான பாதையைக் கொண்டுள்ளனர்.

(With inputs from Agencies)

.