குறைந்த அளவில் அமெரிக்க விமான சேவையை அனுமதிக்கின்றது சீனா!

இந்த நடவடிக்கைகள் திடீரென ஏற்பட்டதல்ல. கடந்த இரு ஆண்டுகளாக சீனா, அமெரிக்கா நாடுகளின் உறவுகள் அவ்வளவு அற்புதமானதாக இருந்திருக்கவில்லை. இரண்டு நாடுகளும் உலகில் மிகப்பெரும் பொருளாதார பலம் கொண்ட நாடுகளாகும்.

குறைந்த அளவில் அமெரிக்க விமான சேவையை அனுமதிக்கின்றது சீனா!

சீனா வந்ததும் பயணிகள் COVID-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்

Beijing, China:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் 64 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் தற்போது விமான சேவை தொடங்கப்பட உள்ளது. லாக்டவுன் காலகட்டங்களில் பல நிறுவனங்களின் விமான சேவையை சீனா நிறுத்தி வைத்திருந்தது. குறிப்பாக அமெரிக்காவின் மூன்று விமான நிறுவனங்களின் சேவையை சீனா நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது தடையை நீக்கி விமான போக்குவரத்தினை கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு யுஎஸ் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்லா போன்று மற்றுமொரு விமான நிறுவனமும் விமானங்களை இயக்கி வந்தன. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 12 முதல் வாரத்திற்கு ஒரே ஒரு அமெரிக்க விமானம் மட்டுமே சீனாவிற்குள் அனுமதிக்கப்படும் என்கிற கட்டுப்பாட்டினை சீனாவின் சிவில் ஏவியேஷன் ஆணையம் (CAAC) விதித்திருந்தது. இதன் காரணமாக கடும் நெருக்கடிக்கு உள்ளான விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்திக்கொண்டன. இதனால் சீனாவும் அந்நிறுவனங்களின் சேவைகளை அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படுவதாக அறிவித்தது. இதனையொட்டி அமெரிக்கா அரசானது மீண்டும் சீனாவிற்கு பழையபடி விமான சேவையை தொடங்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. அதன் பின்னர் சீனாவின் விமானங்களும் ஜூன் 16 முதல் அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சீனா தற்போது மீண்டும் அமெரிக்க நிறுவனங்களின் விமான சேவைக்கு அனுமதியளித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் திடீரென ஏற்பட்டதல்ல. கடந்த இரு ஆண்டுகளாக சீனா, அமெரிக்கா நாடுகளின் உறவுகள் அவ்வளவு அற்புதமானதாக இருந்திருக்கவில்லை. இரண்டு நாடுகளும் உலகில் மிகப்பெரும் பொருளாதார பலம் கொண்ட நாடுகளாகும்.

தற்போது சீனா வரும் விமான பயணிகள் அனைவரும் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மூன்று வாரங்களில் சீனா வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று இல்லையெனில் அடுத்து வரக்கூடிய ஒவ்வொரு வாரத்திலும் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும். ஆனால், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விமான பயணிகளுக்கு தொற்று இருப்பின் அந்த விமான நிறுவனங்களின் சேவையானது குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு தடை செய்யப்படும் என சீனாவின் சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்துள்ளது.