This Article is From Dec 27, 2019

'குடியுரிமை சட்ட திருத்தத்தை புதுவையில் அமல்படுத்த மாட்டோம்' - நாராயணசாமி திட்டவட்டம்!!

காங்கிரஸ் கட்சியின் முதல்வரான நாராயண சாமி, குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் என்.ஆர்.சி. ஆகியவை பாஜகவின் கொள்கையான இந்துத்துவாவை நிறைவேற்றுவதற்காக கொண்டு வரப்பட்டவை என்று விமர்சித்துள்ளார்.

'குடியுரிமை சட்ட திருத்தத்தை புதுவையில் அமல்படுத்த மாட்டோம்' - நாராயணசாமி திட்டவட்டம்!!

CAA முஸ்லிம்களை புறக்கணிப்பதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

New Delhi:

என்ன எதிர்ப்பு வந்தாலும் குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் என்.ஆர்.சி. ஆகியவற்றை புதுச்சேரியில் நிறைவேற்ற விட மாட்டோம் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். முஸ்லிம்களை குடியுரிமை திருத்த சட்டம் புறக்கணிப்பதாக அவர் கூறியுள்ளார். 

குடியுரிமை சட்ட திருத்தமும், என்.ஆர்.சி.யும் தவறான எண்ணத்தை விதைப்பதாக குற்றம் சாட்டியுள்ள நாராயண சாமி, பாஜகவின் கொள்கையான இந்துத்துவாவை அடைவதற்காக இந்த இரண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது என்று விமர்சித்தார். 

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என்று முடிவு செய்திருப்பதாக கூறிய அவர், புதுச்சேரியிலும் இவை நிறைவேற்றப்படாது என்று உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்த நாராயணசாமி, 'அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகள் இந்தியாவில் தங்கியுள்ளனர். அவர்களை ஏன் வெளியேற்ற வேண்டும்?. ரோஹிங்யா முஸ்லிம்களின் நிலைமையும் இப்படித்தான் உள்ளது. 

குடியுரிமை சட்ட திருத்தம் இந்திய முஸ்லிம்களை புறக்கணிக்கிறது. இப்படி பிரிவினைவாத வழியில் எதையும் நிறைவேற்ற முடியாது. அனைத்து மத மக்களையும் இந்த சட்ட திருத்தத்தில் இணைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் பாஜக இந்த சட்டத்தில் சேர்த்துள்ளது. என்ன நடந்தாலும் சரி, குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடான என்.ஆர்.சி. ஆகியவற்றை இந்தியாவில் நிறைவேற்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம்' என்று கூறினார்.

2014 டிசம்பர் 31-ம்தேதிக்கு முன்னர் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை சட்ட திருத்தம் குடியுரிமையை வழங்குகிறது. 

.