This Article is From Sep 19, 2019

Chennai weather: சென்னையில் இடி மின்னலுடன் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடிமின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.

Chennai weather: சென்னையில் இடி மின்னலுடன் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!

சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது, தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது

சென்னையில் இடி, மின்னலுடன் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. நள்ளிரவில் தொடங்கிய மழை காலையிலும் நீடித்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். 

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடிமின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலையிலும் நீடித்தது. அண்ணா நகர், வடபழனி, கிண்டி, மீனம்பாக்கம், விருகம்பாக்கம், போரூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மழை நீடித்தது. இதேபோல் சென்னையை அடுத்துள்ள மாதவரம், புழல், செங்குன்றம், சோழவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது, தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்பவர்களும், வியாபாரிகளும் மழையில் நனைந்தபடியே சென்றனர். மேலும், முக்கிய சாலையில் ஏற்பட்ட தண்ணீர் தேக்கத்தினால், பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்தனர். 

தொடர்ந்து, சென்னை முழுவதும் காலை முதல் மழைச்சாரல் பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு பெய்த மழை அளவு, திருவள்ளூரில் 216 மி.மீ, பூண்டி ஏரியில் 206 மி.மீ, திருத்தணியில் 150 மி.மீ, சோழவரம் ஏரியில் 135 மி.மீ, எண்ணூரில் 107 மி.மீ, சென்னை நகரில் 104 மி.மீ, அயனாவரத்தில் 96 மி.மீ, பிராட்வே பகுதியில் 79 மி.மீ, அம்பத்தூரில் 85 மி.மீ, கே.கே.நகரில் 77 மி.மீ கனமழை பெய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பதிவில், கடந்த நவம்பர் 2017-ம் ஆண்டுக்கு பின்னர் சென்னையில் பெய்த அதிகபட்ச கனமழையாகும் என்று தெரிவித்துள்ளார். 

.