This Article is From Nov 12, 2019

அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்தில் வருகின்றன பாம்புகள்!! கல்வித்துறை நடவடிக்கை!

சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் பாம்புகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. பார்ப்பதற்கு அச்சுறுத்தும் உயிரினமாக காட்சியளித்தாலும், மனிதனுக்கு அவை மறைமுகமாக பல நன்மைகளை செய்வதாக சொல்கின்றன ஆய்வுகள்.

அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்தில் வருகின்றன பாம்புகள்!! கல்வித்துறை நடவடிக்கை!

பாம்புகள் பற்றிய அடிப்படைத் தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என அரசு கருதுகிறது.

Kolkata:

அடுத்து வரும் கல்வியாண்டு முதல் பள்ளி பாடப் புத்தகங்களில் பாம்புகளைப் பற்றிய தகவல்களும், பாடங்களும் இடம்பெறும் என்று மேற்குவங்க கல்வித்துறை முடிவு  செய்துள்ளது.

இந்த பாடப்பிரிவில் பல்வேறு வகையான பாம்புகள் இடம் பெறுகின்றன. சுற்றுச் சூழலை சமமாக வைத்துக் கொள்வதில் பாம்புகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

விஷம் கொண்ட மற்றும் விஷமற்ற பாம்புகள், அவற்றின் பூர்வீகம், பாம்புகளின் பொதுப் பெயர்கள், வகைகள், பாம்பைப் பார்த்தால் அவற்றை எப்படி அணுகுவது உள்ளிட்ட தகவல்கள் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெறும் என்று, மேற்கு வங்க பாடப்புத்தக கமிட்டியின் தலைவர் அபிஷேக் மஜும்தார் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவர்களின் உதவியோடு பாம்புகள் தொடர்பான வரைவு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அவர்களது அன்றாட வாழ்வில் பயன்படும் என்றும், பாம்புகள் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கு உதவும் என்றும் அபிஷேக் மஜும்தார் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க பள்ளிக் கல்வி வாரியத்தின் தலைவர் கல்யாண் கங்குலி கூறுகையில், 'மாணவர்கள் மத்தியில் சுற்றுச் சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு விரும்புகிறோம். பள்ளிப் பாடத்தில் பாம்புகளைப் பற்றிய தகவல்களை இடம் பெறச்செய்வது என்பது, எங்களது விழிப்புணர்வு முயற்சிகளில் ஒன்று.‘ என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சமீப காலமாக கிராமப்புறங்களில் பாம்புக்கடியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேபோன்று பாம்பை பார்ப்பவர்கள் அதனை வனத்துறையிடம் ஒப்படைக்காமல் கொன்று விடும் சம்பவங்களும் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.