This Article is From Jan 23, 2020

மரண தண்டனை வழக்குகளில் குற்றவாளிகளின் மேல்முறையீடுகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை!!

தற்போதுள்ள விதிகளின்படி மரண தண்டனை கைதிகள், ஒவ்வொரு முறையும் மேல் முறையீடு செய்து தண்டனை நிறைவேற்றும் காலத்தை தள்ளிப்போடுகின்றனர். நிர்பயா வழக்கில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இத்தகைய குற்றவாளிகள் சட்டத்துடன் விளையாடுவதாக மத்திய அரசு கண்டித்துள்ளது.

மரண தண்டனை வழக்குகளில் குற்றவாளிகளின் மேல்முறையீடுகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை!!

மரண தண்டனை குற்றவாளிகளுக்கு உள்ள உச்ச நீதிமன்ற விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரக்கோரி மத்திய அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

New Delhi:

மரண தண்டனை வழக்குகளில் குற்றவாளிகளின் மேல்முறையீடுகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மரண தண்டனை குற்றவாளிகளுக்கு உள்ள உச்ச நீதிமன்ற விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரக்கோரி மத்திய அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள விதிகளின்படி மரண தண்டனை கைதிகள், ஒவ்வொரு முறையும் மேல் முறையீடு செய்து தண்டனை நிறைவேற்றும் காலத்தை தள்ளிப்போடுகின்றனர். நிர்பயா வழக்கில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இத்தகைய குற்றவாளிகள் சட்டத்துடன் விளையாடுவதாக மத்திய அரசு கண்டித்துள்ளது.

முக்கிய குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் மரண  தண்டனை விதித்தாலும், தங்களுக்கு உள்ள உரிமைகள் மற்றும் விதிகளை பயன்படுத்தி குற்றவாளிகள் மேல்முறையீடு, கருணை மனுத்தாக்கல் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது தள்ளிப் போடப்படுகிறது.

தாங்கள் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிக்க குற்றவாளிகளுக்கு போதிய அவகாசம் வழங்கப்படுகிறது. இருப்பினும் இதனை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு கொடூர குற்றத்தில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் சட்டத்துடன் விளையாடுவதாக மத்திய அரசு கருதுகிறது.

இதனை தடுப்பதற்காக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், உச்ச நீதிமன்றம் மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தால் அதனை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்வதற்கு குறைந்த கால அவகாசம் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரின் தண்டனை நிறைவேற்றப்படுவது, ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு குற்றவாளியின் சட்ட நடவடிக்கையால் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்துதான் மத்திய அரசு தற்போது மனுத்தாக்கலை செய்திருக்கிறது.

நிர்பயா வழக்கில் 4 பேருக்கு கடந்த 9-ம்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் இன்றைக்கு தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டிய நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் கருணை மனுவை குடியரசு தலைவருக்கு அனுப்பியிருந்தார்.

கருணை மனு நிராகரிக்கப்பட்டால், அந்த குற்றவாளிக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பது விதி. இதன் அடிப்படையில் குற்றவாளியின் கருணை மனுவை குடியரசு தலைவர் கடந்த வாரம் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு பிப்ரவரி 1-ம்தேதி காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

இதற்கிடையே, குற்றவாளி பவன் குப்தா என்பவர் குற்றம் நடந்தபோது தான் சிறார் என்று கூறி, தனக்கான தண்டனையை தளர்த்துமாறு கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

முன்னதாக இதே மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது. 

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'குற்றவாளி பவன் குப்தாவின் மனுவை விசாரிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை. ஒருமுறை அவர் சிறார் என்று ஆய்வு செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதனை மீண்டும் விசாரிக்க முடியாது. ' என்று தெரிவித்தது.

முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'எத்தனைமுறை நாங்கள் ஒரே கோரிக்கையை திரும்பத் திரும்ப விசாரிப்பது?. மனுதாரர் இந்த விஷயத்தை பலமுறை நீதிமன்றத்தில் எழுப்பி விட்டார்' என்று தெரிவித்திருந்தது. 

கடந்த 2012 டிசம்பர் 16-ம்தேதி 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தெற்கு டெல்லி சாலையில் கீழே தள்ளி விடப்பட்டார். இதன்பின்னர் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடைசியாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 2012 டிசம்பர் 29-ம்தேதி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள். அவர்களில் ராம் சிங் என்பவர் திகார் சிறையில் விசாரணையின்போது தூக்கிட்டுக் கொண்டார். குற்றவாளிகளில் ஒருவர் சிறுவர் ஆவார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது மீதமுள்ள 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

.