This Article is From Nov 17, 2018

சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து சிபிஐ-க்கு செக் வைக்கும் மம்தா..!

சிபிஐ அமைப்பு நினைத்த நேரத்தில் எங்கள் மாநிலத்திற்குள் வந்து ரெய்டு நடத்த முடியாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்னர் சொல்லி அதிர்ச்சி கொடுத்தார்

சந்திரபாபு நாயுடுவைத் தொடர்ந்து மம்தாவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்

ஹைலைட்ஸ்

  • இனி மேற்கு வங்கத்தில் சிபிஐ சுதந்திரமாக செயல்பட முடியாது
  • மாநில அரசிடம் ‘ஒப்புதலுடன்’ தான் சிபிஐ இனி செயல்பட முடியும்
  • நவ., 8-ல் சந்திரபாபு நாயுடு இந்நடவடிக்கையை முதலில் எடுத்தார்
New Delhi:

சிபிஐ அமைப்பு நினைத்த நேரத்தில் எங்கள் மாநிலத்திற்குள் வந்து ரெய்டு நடத்த முடியாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்னர் சொல்லி அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் அதேபோல ஒரு நடைமுறையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளார்.

சிபிஐ அமைப்பைப் பொறுத்தவரை, டெல்லியில் அது சுதந்திரமாக செயல்பட உரிமையுள்ளது. அதே நேரத்தில் மற்ற மாநிலங்களுக்குள் செல்லும் போது ‘ஒப்புதல்' பெற வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள மம்தா பானர்ஜி, ‘சந்திரபாபு நாயுடு, சிபிஐ குறித்து எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன்' என்று பேசியுள்ளார்.

கடந்த நவம்பர் 8 ஆம் தேதி, சிபிஐ அமைப்புக்கு ஆந்திர அரசு, ‘இனி எங்கள் மாநிலத்திற்குள் வருவதென்றால் ஒப்புதல் பெற வேண்டும்' என்று ரகசிய அறிக்கையை அனுப்பியது. இந்த அறிக்கை சமீபத்தில் லீக் ஆனது.

சிபிஐ-யின் இயக்குநரான அலோக் வெர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையில் சமீபத்தில் பனிப் போர் மூண்டதைத் தொடர்ந்து இருவருக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து சமீபத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, ‘சிபிஐ அமைப்பைத் தன் கைக்குள் வைத்திருக்க பாஜக தலைமையிலான அரசு முற்பட்டதால் தான், இவ்வளவு பிரச்னை எழுந்துள்ளது' என்று குற்றம் சுமத்தினார்.

அந்திர அரசின் அதிரடி நடவடிக்கை குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர், லங்கா தினகர், ‘கடந்த 6 மாதங்களாக சிபிஐ அமைப்பில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. அதையொட்டித் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக மோடி தலைமையிலான அரசு சிபிஐ அமைப்பை பயன்படுத்தி வருகிறது. இதனால் அந்த அமைப்பின் சுதந்திரத் தன்மை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சிக்கு நெருக்கமான தொழிலதிபருக்கு எதிராக சமீபத்தில் சிபிஐ ரெய்டு நடத்தியது. அது சந்திரபாபு நாயுடுவை மிகவும் கோபமடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

.