This Article is From Jul 08, 2019

இருதய நோய் பாதிப்பு: முகிலனை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் மறுப்பு!

இருதய நோய் பாதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் முகிலனை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டதால் போலீசாரால் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை என்று தெரிகிறது.

இருதய நோய் பாதிப்பு: முகிலனை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் மறுப்பு!

நீண்ட நாட்களாக முகிலன் காணாமல் போனதாக கூறப்பட்டு வந்த நிலையில், இரண்டு நாட்கள் முன்னதாக, ஆந்திரா ரயில் நிலையத்தில் போலீசார் பிடியில் முகிலன் இருப்பது போன்று வெளியான காணொளியைத் தொடர்ந்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அன்று நள்ளிரவே, மாஜஸ்திரேட் முன்னர் ஆஜர் செய்யப்பட்டார் முகிலன். அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தால், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கச் சொல்லி உத்தரவிட்டார் மாஜிஸ்திரேட். இதன் தொடர்ச்சியாக சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முகிலன்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், “என்னை கடத்திச் சென்றது யார் என்று தெரியவில்லை. கடத்தப்பட்ட அத்தனை நாட்களும் என் கண்கள் கட்டப்பட்டிருந்தன. ஒரெயொரு முறைதான் கண்கள் திறக்கப்பட்டு, ஒருவரிடம் பேச அனுமதிக்கப்பட்டேன். எனக்கு என்ன வேண்டுமானாலும் செய்து தருவதாகக் கூறினார்கள். வெளிநாட்டுக்குப் போய்விடுமாறு வற்புறுத்தினார்கள்.

அவர்களின் இந்தப் பேச்சுக்கு நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன். அதைத் தொடர்ந்து யாரும் என்னிடம் சரியாக பேசவில்லை. கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே தவித்தேன் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் முகிலனை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டதால் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த முடியாத நிலை காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் முகிலனுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நெஞ்சு வலி அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே முகிலனுக்கு இருதய நோய் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்பதால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.

பரிசோதனை முடிவுகள் நாளை தான் கிடைக்கும் என்பதால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் முகிலனை இன்று டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து விட்டது. தற்போது மருத்துவமனையில் முகிலனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே முகிலனை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாத நிலை காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.

.