This Article is From Aug 10, 2018

‘முதல் நாள் முதல் ஷோ!’- ஐகேஇஏ ஸ்டோருக்குக் கொடுக்கப்பட்ட மாஸ் ஓபனிங்

பிரபலமான ஐகேஇஏ சுவீடன் பிராண்டு, வீட்டு உபயோக பொருட்களின் ஸ்டோர், இந்தியாவில் முதல் கிளையை தொடங்கியுள்ளது

Hyderabad:

பிரபலமான ஐகேஇஏ சுவீடன் பிராண்டு, வீட்டு உபயோக பொருட்களின் ஸ்டோர், இந்தியாவில் முதல் கிளையை தொடங்கியுள்ளது. ஹைதரபாத்தில், 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள ஐகேஇஏ ஸ்டோர், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த 7 ஆண்டுகளில், மேலும் 25 கிளைகள் இந்தியாவில் தொடங்கும் திட்டத்தில் ஐகேஇஏ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. குறைந்த விலையில் தரமான வீட்டு உபயோகப் பொருட்கள் ஐகேஇஏ ஸ்டோரில் விற்பனைக்கு உள்ளது. இன்று தனது கடையை வாடிக்கையாளருக்காக ஐகேஇஏ நிறுவனம் திறந்துள்ளதால், கூட்டம் அங்கு அலைமோதிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஐகேஇஏ கடையின் முதல் வாடிக்கையாளராக நுழைந்த ராஜினி வேணுகோபால், ‘என் மகனுடன் ஐகேஇஏ ஸ்டோருக்கு காலை 7 மணிக்கே வந்துவிட்டேன். சிங்கப்பூரில் ஐகேஇஏ ஸ்டோரில் நான் ஷாப்பிங் செய்துள்ளேன். இங்கு அதை நான் தவறவிட விரும்பவில்லை. முதல் நாள் முதல் ஷோவை எப்படி தவறவிடுவது?’ என்கிறார்.

அதே நேரத்தில் வித்யா என்ற இன்னொரு வாடிக்கையாளர், ‘இது திருப்பதியில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வதை விட மோசமானதாக இருக்கிறது’ என்று வருத்தப்பட்டரார். ஒரு கட்டத்திற்கு மேல் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஐகேஇஏ நிறுவன ஊழியர்கள், குறிப்பிட்ட அளவிலான மக்களை மட்டும் உள்ளே அனுப்பி, பிறரை காத்திருக்குமாறு வேண்டினர். இருந்தும் மக்களுக்கு மத்தியில் தள்ளு முள்ளு நடந்து வருகிறது.

ஐகேஇஏ நிறுவனத்தின் இந்திய சிஇஓ, ‘எங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு மெய் சிலர்க்க வைக்கிறது. இந்தக் கடையை திறப்பதற்கு முன்னர் சுமார் 1,000 இந்திய வீடுகளுக்குச் சென்று, அவர்களுக்கு என்னப் பிடிக்கும், எது தேவை என்பன குறித்தெல்லாம் கள ஆய்வு மேற்கொண்டோம். இந்திய மக்களின் ரசனைக்கு ஏற்றாற் போல எங்கள் ஸ்டோர்களில் பொருட்கள் இருக்கும்’ என்று மகிழ்ச்சிப் பொங்க கூறியுள்ளார்.

ஐகேஇஏ நிறுவனம் அதற்குள் 950 பேரை வேலைக்கு எடுத்துள்ளது. இதில் 50 சதவிதத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வேலை வாய்ப்பு இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தெலுங்கானாவின் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ், ‘சிறு வயதில் நான் ஐகேஇஏ ஸ்டோரில் ஷாப்பிங் செய்துள்ளேன். தற்போது நம் நாட்டுக்கே இந்த ஸ்டோர் வந்திருப்பது மகிழ்ச்சி. அவர்கள் பல உள்ளூர் கலைஞர்களை வைத்துத்தான் கடையை கட்டி எழுப்பியுள்ளனர். அவர்களின் பொருட்களும் தரம் உயர்ந்ததாகவும், விலை குறைந்ததாகவும் இருக்கின்றன. இந்திய நடுத்தரக் குடும்பங்களுக்கு மத்தியில் ஐகேஇஏ நிறுவனம் நன்கு பிரபலமாகும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

.