This Article is From Jan 22, 2020

சிஏஏ-வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 144 மனுக்கள் மீது இன்று விசாரணை!

Citizenship Amendment Act, CAA: இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள், இது முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாகவும், சட்ட சாசனத்தின் மதச்சார்பின்மையை பின்பற்றவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். 

Citizenship Amendment Act, CAA: குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில், அது குறித்தான விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

New Delhi:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 144 மனுக்கள் மீது இன்று விசாரணை செய்யப்பட இருக்கிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போட்கே தலைமையிலான நீதிமன்ற அமர்வுக்குக் கீழ் மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன. 

பெரும்பான்மையான மனுக்கள் இந்தச் சட்டமானது, சட்ட சாசனத்துக்குப் புறம்பானது என்று கூறுகின்றன. அதேபோல மத அடிப்படையில் இந்தச் சட்டம் மூலம் குடியுரிமை வழங்கப்படும் என்பதால், அனைவரும் சமம் என்கிற உரிமையையும் இந்தச் சட்டம் மீறுவதாக மனுக்கள் தெரிவித்துள்ளன. தாக்கல் செய்யப்பட்டுள்ள பல மனுக்கள், ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்திருக்கும் சிஏஏ-வுக்குத் தற்காலிகத் தடை விதிக்கச் சொல்லியும் வலியுறுத்துகின்றன.

காங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள், சிஏஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள அரசியல் கட்சிகள் ஆகும். 

கடந்த ஜனவரி 9 ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில், “குடியுரிமைச் சட்டம், சட்டசாசனத்துக்கு உட்பட்டது” என்று அறிவிக்கக் கோரியது. அதை தள்ளுபடி செய்த நீதிமன்றம், “ஒரு விஷயம் சட்டத்துக்கு உட்பட்டதா என்பதை தீர்மானிக்க மட்டுமே நீதிமன்றம்,” என்று உறுதியாக கூறியது.

சிஏஏ தொடர்பாக முன்னதாகவே உச்ச நீதிமன்றம், மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய அரசு தரப்பு, சில உயர் நீதிமன்றங்களில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. 

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில், அது குறித்தான விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதே நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “என்ன போராட்டம் செய்தாலும் சிஏஏ திரும்பப் பெறப்படாது,” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

இது குறித்து மிகவும் வீரியமாக போராட்டம் நடந்து வரும் லக்னோவில் அமித்ஷா பேசுகையில், “இப்போது சொல்கிறேன். யார் போராட்டம் செய்தாலும், இந்தச் சட்டம் திரும்பப் பெறப்படாது. நாங்கள் எதிர்க்கட்சிகளைப் பார்த்து அஞ்சப் போவதில்லை. எதிர்ப்புகளில் பிறந்தவர்கள் நாங்கள்,” என்றுள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து மத ஒடுக்குமுறையால் வெளியேற்றப்படும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்தச் சட்டம் மூலம் குடியுரிமை வழங்கப்படும் என்றும் எனவே இது அந்நாட்டுச் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு இந்த சலுகையை மத்திய அரசு வழங்குகிறது.

அதே நேரத்தில் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள், இது முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாகவும், சட்ட சாசனத்தின் மதச்சார்பின்மையை பின்பற்றவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். 
 

.