68 நாட்களுக்கு பின்னர் தமிழகத்தில் பேருந்துகள் ஓடத் தொடங்கின! பயணிகள் மகிழ்ச்சி

தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியபோதிலும், பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்ததால் மக்கள் சிரமம் அடைந்து வந்தனர். தற்போது மீண்டும் பேருந்துகள் இயக்கப்படுவதால் இயல்பு நிலை திரும்பத் தொடங்கயுள்ளது. 

68 நாட்களுக்கு பின்னர் தமிழகத்தில் பேருந்துகள் ஓடத் தொடங்கின! பயணிகள் மகிழ்ச்சி

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் தடைபட்டிந்த பேருந்து இயக்கம், 68 நாட்களுக்கு பின்னர் மீண்டும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற இடங்களில் பகுதியளவு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

பேருந்துகளைப் போன்று ஆட்டோக்கள் செயல்படவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சென்னையிலும் ஆட்டோக்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. 

நிலைமை சீரடைந்தால், மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியபோதிலும், பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்ததால் மக்கள் சிரமம் அடைந்து வந்தனர். தற்போது மீண்டும் பேருந்துகள் இயக்கப்படுவதால் இயல்பு நிலை திரும்பத் தொடங்கயுள்ளது. 

இதுகுறித்து மதுரையை சேர்ந்த பயணி ஒருவர் கூறுகையில், 'நான் மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறேன். இரு சக்கர வாகனத்தில் செல்வதை விட இனி பேருந்தில்தான் செல்லுவேன்' என்று கூறியுள்ளார். 

சென்னையை பொருத்தளவில் மே 31 நிலவரப்படி, 14,802 பேருக்கு பாதிப்பு உள்ளது. செங்கல்பட்டில் 1,177 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 407 பேருக்கும், திருவள்ளூரில் 948 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 22,333 பேருக்கு பாதிப்பு இருக்கும் நிலையில், பெரும்பான்மை பாதிப்புகள் இந்த 4 மாவட்டத்தில்தான் உள்ளன. 

தமிழகத்தில் பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், 'பயணிகள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேருந்துகளில் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. கட்டணம் உயர்த்தப்படவில்லை. அரசுப் பேருந்துகளில் சோதனை முயற்சியாக பே. டிஎம் மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்தவரை மின்னணு முறையை பயன்படுத்தலாம்.' என்று தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கோவை - காட்பாடி எக்ஸ்பிரஸ், கோவை - மயிலாடுதுறை சிறப்பு ரயில், மதுரை - விழுப்புரம் சிறப்பு ரயில் ஆயிவை இயக்கப்பட்டுள்ளன. இவற்றில் சமூக விலகலுடன், சானிட்டைசர் உபயோகம், மாஸ்க் அணிதல், வெப்பநிலைமானி கருவி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன.