This Article is From Dec 01, 2018

அழிவை சந்திக்கும் அமேசான் என்னும் அரிய பொக்கிஷம்

இனி வரும் காலத்தில் காடுகள் மட்டுமே உலகை காப்பாற்றும் என்பதால் காட்டை பாதுகாப்பதின் வழி மட்டுமே இனி மனித சமூகத்தால் வாழ முடியும்.

அழிவை சந்திக்கும் அமேசான் என்னும் அரிய பொக்கிஷம்

அடர்த்தியாகவும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள், பின்னிப் பிணைந்த கொடிகளும், சூரிய வெளிச்சத்தையே பார்க்காத நிலப்பரப்பாகவும், அபூர்வமான விலங்குகள், பறவைகள், வெளி உலகத்தையே பார்க்காத 22,000 பழங்குடியின மக்களுக்கும் வாழ்வதாரமான இடமாக இருக்கிறது அமேசான் காடுகள்.

அமேசான் காடுகளின் ஜீவாதாராமாக விளங்குவது அமேசான் நதி. உலகின் மிகப்பெரிய 2 வது நதியாக அமேசான் நதி உள்ளது. சில இடங்களில் இந்த நதியின் அகலம் சுமார் 150 மைல்கள், அதாவது 190 கி.மீ. மக்களின் வாழ்வாதாரமாகவும் பல்வேறு வன உயிர்களின் இருப்பிடமாகவும் இருந்து வருகிறது அமேசான் நதி.

காட்டின் வளங்கள் கடந்த 30 ஆண்டுகளில் வெகுவாக அழிக்கப்பட்டு வருகிறது. காட்டை அழித்து விட்டு அதில் பணப்பயிர்களான சோயாவும் யூகலிப்ட்ஸும் நடப்பட்டுவருகின்றன. இந்த ஆண்டு அதாவது ஆகஸ்டு 2017 முதல் ஜுலை 2018 வரை அமேசானில் அழிக்கப்பட்ட காட்டின் அழிவு மட்டும் 1மில்லியன் கால்பந்து மைதானத்திற்கு இணையாகவுள்ளது. வேறு விதமாக சொல்வதென்றால் 5 லண்டன் நகரத்திற்கு இணையான அளவுள்ள காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு ஆண்டுகளை விட இதன் அளவு மிகவும் அதிகம். காட்டை அழிப்பதற்கு பலரும் பல காரணங்களை முன்வைத்தாலும் இன்றைய உலக அளவில் பல சூழலியல் நிபுணர்கள் பலரும் கவலையுடன் பார்க்கின்றனர். இதற்கெல்லாம் மேல் அங்கு வாழும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு நில உடைமை வேண்டும் என்று போராடி வருகின்றனர். அதில் சில இனத்தவர்க்கு மட்டுமே நில உடமை கொடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்கள் மரங்களிடையே சில ஊடு பயிர்களை போட்டு விவசாயம் செய்கிறார்கள். மீன் பிடித் தொழில் போன்றவற்றை செய்து தற்சார்பு வாழ்வை வாழ்கிறார்கள். பழங்குடியின மக்கள் கைகளில் காட்டை ஒப்படைத்தால் காடும் வாழ்கிறது அதை அடிப்படையாகக் கொண்டு மக்களும் வாழ்கிறார்கள்.

பிரேசிலில் அதிகார மையங்கள் யாவும் நிலக்கிழார்களின் கையில் இருப்பதால் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு 30 ஆண்டுகாலமாக போராடும் பழங்குடியின மக்களுக்கு இன்றளவும் நில உரிமை கொடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பிரேசிலில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பழங்குடிகளுக்கு நிலவுடமை கொடுக்கப்பட்ட இடங்களில் காடுகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட காடுகள் பெறும் அழிவை சந்தித்திருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரேசிலில் நிலவுடமைக்காக போராடுபவர்கள் பலரும் படுகொலை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இன்றைய காலநிலை மாற்றம் நிகழ்கிற சூழலில் காடுகளின் அழிப்பு எந்த விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிசெல்வனிடம் கேட்டபோது, “காடழிப்பு என்பது அமேசானில் மட்டுமல்ல வெப்ப மண்டலப் பகுதிகளான இந்தோனேசியா, ஆப்ரிக்கா ஆகிய இடங்களில் உள்ள காடுகளும் அழிக்கப்படுகின்றன. இந்த காட்டை அழிக்கும் செயலுக்கு பின்னால் இருப்பதெல்லாம் கார்ப்ரேட் நிறுவனங்கள் மட்டுமே. கார்ப்ரேட் நிறுவனங்கள் உருவாக்கும் பண்ணைகளுக்காகவே பெரும்பாலும் காடுகள் அழிக்கப்படுகின்றன. பூமிக்குத் தேவையான 70% ஆக்ஸிஜன் கடலிலிருந்து கிடைக்கிறது. மீதமுள்ள 30 சதவீதம் வெப்ப மண்டல காடுகள் மூலமாக மட்டுமே கிடைக்கின்றன. அதில் அமேசான் காடுகளுக்கு முக்கிய பங்குண்டு. இதில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவது என்பது சூழலியலை கடுமையாக பாதிக்கும். மேலும் ஐக்கிய நாடுகள் சபை கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதில் இனி வரும் காலங்களில் காட்டினை பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளது. காடழிப்பு என்பது காலநிலை மாற்றத்திற்கும் புவி வெப்பமயமாதல் அளவையும் அதிகரிக்கவே செய்யும். இதற்காகவே நாம் காடுகள் பாதுகாப்பு என்பது முக்கியமாக இருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் கலாச்சாரமே மனிதர்களையும் இயற்கையையும் உற்பத்திக்கான காரணியாகவும், பொருளாகவே பார்க்கின்றன. முதலாளித்துவ முறையானது காட்டையும் அப்படித்தான் பார்க்கும். முதலாளித்துவம் மனிதர்களை மட்டுமே நோக்கமாக வைத்துச் செயலபடும். ஆனால் பழங்குடியின மக்களோ மனிதர்களை மட்டும் உலகின் பிரதானமாக பார்க்காது. அங்குள்ள மக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப மட்டுமே உற்பத்தியை செய்துகொள்கிறார்கள். முதலாளித்துவம் ஓரிடத்தில் உற்பத்தி செய்து அதை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உற்பத்தி இடத்தையும் விற்பனைக்கான இடத்தையுமே சந்தையாகவும் லாப நோக்கத்துடன் மட்டுமே பார்க்கும். உற்பத்தியை பிராந்திய அளவில் செய்ய வேண்டும். மக்களின் தேவைக்கேற்ற அளவே உற்பத்தியைச் செய்ய வேண்டும். அந்தந்த நாட்டுக்கு தேவையான பொருட்களை அங்கேயே உற்பத்தி செய்ய வேண்டும். உற்பத்தி என்பதே தேவைக்கு ஏற்ற அளவில் செய்ய வேண்டும். ஆடம்பரத்திற்காக உற்பத்தி செய்வது அழிவைக் கொடுக்கும்” என்று தெரிவித்தார்.

இனி வரும் காலத்தில் காடுகள் மட்டுமே உலகை காப்பாற்றும் என்பதால் காட்டை பாதுகாப்பதின் வழி மட்டுமே இனி மனித சமூகத்தால் வாழ முடியும்.

.