This Article is From Mar 05, 2019

அனைத்து வாகனங்களிலும் 2 வாரங்களுக்குள் கருப்பு ஸ்டிக்கர் கட்டாயம்! - உயர்நீதிமன்றம்

அனைத்து மோட்டார் வாகன ஹெட்லைட்டிலும் 2 வாரத்தில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து வாகனங்களிலும் 2 வாரங்களுக்குள் கருப்பு ஸ்டிக்கர் கட்டாயம்! - உயர்நீதிமன்றம்

கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்படுவதை உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து ராம்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், அதிக பிரகாசமான ஹெட்லைட்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. வாகனங்களை இயக்குவோர் கண் கூசும் தன்மைக்கு உட்படுவதால் விபத்து ஏற்படுவதாகவும், முந்தி செல்ல முயல்வதோ, அல்லது எதிரில் வரும் வாகனத்தின் தூரத்தை ஆராய்வதோ சிக்கலாவதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும், வாகனங்களில் ஹெட்லைட்களைப் பயன்படுத்த கடுமையான நெறிமுறைகள் இருக்கும்போதும் அதிகம் ஒளிரக்கூடிய லைட்டுக்களைப் பயன்படுத்துவதால் தான் அதிகம் விபத்துகள் ஏற்படுகிறது.

இதேபோல், அனைத்து வாகனங்களிலும் ஹெட்லைட்டுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும் என்பது விதி. இதைப் பின்பற்றினால் எதிர்திசையில் வரும் வாகன ஒட்டிகளுக்கு சிரமம் ஏற்படாது. ஆனால், இதனை யாரும் பின்பற்றுவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2 வாரத்தில் அனைத்து மோட்டார் வாகன ஹெட்லைட்டுகளின் மையப்பகுதியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டவும், அதனை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விதியை பின்பற்ற தவறும் வாகன உரிமையாளர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யலாமே என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

.