This Article is From Mar 19, 2019

கோவாவின் புதிய முதல்வராக அதிகாலை 2 மணிக்கு பதவியேற்றார் பிரமோத் சாவந்த்!

Pramod Sawant Goa CM: சபாநாயகராக இருந்து வந்த பிரமோத் சாவந்த்தை கோவா முதல்வராக நியமிப்பதற்கு கூட்டணி கட்சி தலைவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

Goa Chief Minister: பாஜகவின் பிரமோத் சாவாந்த் அதிகாலை 2மணி அளவில் பதவியேற்றார்.

மனோகர் பாரிக்கரின் மறைவை தொடர்ந்து கோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் (Pramod Sawant) இன்று அதிகாலை 2மணி அளவில் பதவியேற்றுக்கொண்டார்.

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் கோவா மாநில முதல்வராகவும் இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த ஒரு வருட காலமாக கணைய புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தார் மனோகர் பாரிக்கர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து, நேற்று மாலை 5 மணியவில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. மனோகர் பாரிக்கரின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, நிதின் கட்கரி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

முன்னதகா, மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்காக பாஜக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடந்தது. இதைத்தொடர்ந்து அமித்ஷா, நிதின்கட்கரி தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது

இதில், கோவாவின் சபாநாயகராக இருந்த பிரமோத் சாவந்த்தை (Pramod Sawant) முதல்வராக நியமிக்க பாஜக தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்கு கூட்டணி கட்சிகளான மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்டு கட்சி உள்ளிட்டவை சம்மதம் தெரிவித்தன.

இதனிடையே, சட்டமன்றத்தில் தாங்களே தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் காங்கிரசை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரை சந்தித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உரிமை கோரினர். இதனால் கோவா அரசியலில் கடந்த 2 நாட்களாக குழப்பம் நீடித்து வந்தது.

40 பேர் கொண்ட கோவா சட்டசபையில் பாஜகவுக்கு மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். கோவா பார்வர்டு கட்சியில் 3 பேர், எம்.ஜி.பி. கட்சியில் 3 பேர், சுயேச்சைகள் 3 பேர் என கூடுதலாக 9 பேருடன் 21 உறுப்பினர்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி செய்து வருகிறது.

கோவா சட்டசபையில் காங்கிரசுக்கு 15 உறுப்பினர்கள் உள்ளனர். எஞ்சிய 4 இடங்கள் 2 உறுப்பினர்கள் மறைவால் காலியாக இருக்கின்றன. அதேபோல, காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேர் கடந்த வருடம் ராஜினாமா செய்ததாலும் காலியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராஜ்பவனில் ஆளுநர் மிருதுளா சின்ஹா, கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்திற்கு நேற்று அதிகாலை 2 மணி அளவில் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜக கூட்டணியில் உள்ள கோவா ஃபார்வர்டு கட்சியின் விஜய் சர்தேசாய் மற்றும் மஹாராஷ்ட்ரவதி கோமன்டாக் கட்சியின் சுதின் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்றனர். சுயேட்சை கட்சிகளைச் சேர்ந்த இருவரும் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.

.