“வெளிநாட்டு பெண்ணுக்கு பிறந்தவர், தேசபக்தராக இருக்க முடியாது!”- ராகுலை சாடும் பிரக்யா தாக்கூர்

இத்தாலியில் பிறந்த சோனியா காந்தியின் பிறப்பு குறித்தும், அவரின் தாய் நாடு குறித்தும் பாஜக தரப்பினர் பல்வேறு சமயங்களில் விமர்சனம் செய்துள்ளனர்.

“வெளிநாட்டு பெண்ணுக்கு பிறந்தவர், தேசபக்தராக இருக்க முடியாது!”- ராகுலை சாடும் பிரக்யா தாக்கூர்

“சாணக்யா, இந்த மண்ணில் பிறந்தவனால்தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் என்றார்"

ஹைலைட்ஸ்

  • போபால் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா தாக்கூர்
  • பல நேரங்களில் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்
  • தற்போது ராகுல் காந்தியை குறிவைத்து சர்ச்சையாக பேசியுள்ளார் தாக்கூர்
Bhopal:

வெளிநாட்டுத் தாயின் வயிற்றில் பிறந்த ஒருவரால் எப்படி தேசபக்தராக இருக்க முடியும் என்று ராகுல் காந்தியின் பெயரைச் சொல்லாமல் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்துள்ளார் பாஜகவின் எம்பி பிரக்யா தாக்கூர். 

போபால் நாடாளுமன்ற உறுப்பினரான தாக்கூர், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் இந்திய தேசபக்திப் பற்றிக் கேள்வியெழுப்பியுள்ளார். 

“சாணக்யா, இந்த மண்ணில் பிறந்தவனால்தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் என்றார். அப்படிப் பார்த்தால், வெளிநாட்டுப் பெண்ணிற்குப் பிறந்தவர் எப்படி தேசபக்தராக இருக்க முடியும். உங்களுக்கு இரு நாடுகளின் குடியுரிமை இருந்தால் எப்படி தேசபக்தியை வெளிப்படுத்துவீர்கள்.

காங்கிரஸ் கட்சி, தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு எப்படிப் பேச வேண்டும் என்று தெரியவில்லை. அந்தக் கட்சிக்கு நெறி, கொள்கை, தேசபக்தி என்றும் எதுவும் இல்லை” என்று அடுக்கடுக்காக சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் தாக்கூர். 

இத்தாலியில் பிறந்த சோனியா காந்தியின் பிறப்பு குறித்தும், அவரின் தாய் நாடு குறித்தும் பாஜக தரப்பினர் பல்வேறு சமயங்களில் விமர்சனம் செய்துள்ளனர். இப்படியான சூழலில்தான் அதை சுட்டிக்காட்டி மீண்டும் விமர்சனம் செய்துள்ளார் பிரக்யா.

இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி மத்திய பிரதேச காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர், “பிரக்யா, தான் வகிக்கும் எம்பி பதவிக்கு அவமானத்தைத் தேடித் தந்துள்ளார். அவர் தீவிரவாதம் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் ஈடுபட்டுள்ளார். இப்படியான நேரத்தில் தன் மனநிலை போக்கையும் அவர் இழந்துள்ளார். பாஜக தரப்பு, அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்,” என கடுகடுத்துள்ளார். 

கடந்த ஜூன் 15 ஆம் தேதி, இந்திய - சீன ராணுவ மோதலால், 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தரப்பு தொடர்ந்து கேள்வியெழுப்பி வரும் நிலையில், அவர்களை ‘ஆன்டி-நேஷனல்' என முத்திரைக் குத்தி வருகிறது பாஜக தரப்பு. 

முன்னதாக ராகுல் காந்தி, “மிஸ்டர் பிரைம் மினிஸ்டர், நீங்கள் உண்மையைப் பேச வேண்டும். நாட்டுக்கு நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். பயப்படாதீர்கள். ‘உண்மையில் நம்மிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டபோது' அப்படி நடக்கவில்லை என்று சொன்னால், அது சீனாவுக்குத்தான் உதவி புரியும். நாம் அனைவரும் சேர்ந்துதான் அவர்களை அடித்துத் துரத்த வேண்டும். அதனால் பயப்படாமல் நீங்கள் உண்மையைப் பேச வேண்டும். ‘ஆம், சீனா நம் நிலத்தை அபகரித்துள்ளது. அதை நாம் மீட்க நடவடிக்கை எடுப்போம்' என்று பேசினால், மொத்த தேசமும் உங்கள் பின்னால் நிற்கும்,” என்று கறார் தொனியில் கூறினார்.