சூடுபிடிக்கும் மத்திய பிரேதச அரசியல்: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பாஜக!!

காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் உள்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விலகியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் பதவியை ராஜினாமா செய்ததால், 15 மாதங்களே ஆன கமல்நாத் தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சூடுபிடிக்கும் மத்திய பிரேதச அரசியல்: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பாஜக!!

22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கமல்நாத் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் கமல்நாத் அரசுக்கு நெருக்கடி
  • 16ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பாஜக
  • காங்கிரஸூக்கு பெரும்பான்மை இல்லை.
Bhopal:

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், வரும் மார்ச்-16ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக பாஜக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் உள்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விலகியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், 15 மாதங்களே ஆன கமல்நாத் தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் நாரோட்டம் மிஸ்ரா கூறும்போது, இந்த அரசு பெரும்பான்மை இல்லாமல் உள்ளதால், நாங்கள் ஆளுநரிடமும், சபாநாயகரிடமும் மார்ச்.16ம் தேதி மாநில பட்ஜெட் தொடங்க உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோர உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 

22 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஆளுநரும், சபாநாயகரும் பெற்றுள்ளனர். தற்போது அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் கூறும்போது, இந்த அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது என்றார். 

மொத்தம் 228 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், காங்கிரஸுக்கு 114 எம்எல்ஏக்கள் பலம் இருந்தது. மேலும், நான்கு சுயேச்சைகள், இரண்டு பகுஜன் சமாஜ்வாதி கட்சி மற்றும் ஒரு சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவும் இருந்தது. ஆனால், தற்போது அந்த ஆதரவு பாஜக பக்கம் திரும்பலாம். 

22 எம்எல்ஏக்களின் ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சட்டப்பேரவையின் பலம் 206ஆக குறைந்துவிடும். அப்போது, பெரும்பான்மைக்கு 104 எம்எல்ஏக்கள் தேவையென்ற நிலையில், காங்கிரஸ் வசம் 92 எம்எல்ஏக்களே உள்ளனர். அதேசமயம் 107 எம்எல்ஏக்கள் உள்ளதால் பாஜகவுக்கே பெரும்பான்மை உள்ளது.