This Article is From Nov 05, 2018

ம.பி தேர்தல்: ‘கிரிமினல் வேட்பாளர்களுக்கு’ காங்கிரஸ் ஆதரவு..!? - பாஜக கடுகடுப்பு!

பாஜக போலியான ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது. இதை முதல்வர் சிவராஜ் சிங் சவுகானே செய்துள்ளார்

ம.பி தேர்தல்: ‘கிரிமினல் வேட்பாளர்களுக்கு’ காங்கிரஸ் ஆதரவு..!? - பாஜக கடுகடுப்பு!
Bhopal:

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், ஒரு வீடியோவில், ‘கிரிமினல் வேட்பாளர்களுக்கு' ஆதரவளிக்கும் வகையில் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான வீடியோ பதிவை மாநில முதல்வரான சிவராஜ் சிங் சவுகான் பகிர்ந்துள்ளார்.

வீடியோவை பகிர்ந்த சவுகான், ‘இப்படித் தான் காங்கிரஸுக்கு அரசியல் செய்யத் தெரியும் என்றால், நவம்பர் 28 ஆம் தேதி நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

வீடியோ பதிவில் கமல்நாத், ‘சிலர் என்னிடம், தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள சில வேட்பாளர்கள் மீது 5 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். 5 என்ன, 6 வழக்குகள் கூட இருக்கட்டும். என்னைப் பொறுத்தவரையில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்க வேண்டும்' என்று பேசுவது போல் இருக்கிறது.

இந்த வீடியோ பதிவு போலியானது என்றும், பாஜக போலியான ஒரு விஷயத்தைத் தேர்தல் ஆதாயத்துக்காக பகிர்ந்து வருகிறது என்றும் காங்கிரஸ் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், நரேந்திர சலூஜா, ‘பாஜக போலியான ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது. இதை முதல்வர் சிவராஜ் சிங் சவுகானே செய்துள்ளார். அந்த வீடியோவைப் பார்த்தால் தெரியும், அது எடிட் செய்யப்பட ஒன்று என்பது. இப்படி நடந்து கொள்வது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து முறைப்படி புகார் அளிக்க உள்ளோம்' என்று கொதித்துள்ளார்.

.