உன்னாவ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட எம்.எல்.ஏ-வை கட்சியிலிருந்து நீக்கியது பாஜக!

சில நாட்களுக்கு முன்னர் உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது வழக்கறிஞர் மற்றும் உறுவினர்கள் சென்ற காரின் மீது, பதிவு எண் இல்லாத லாரி மோதியது

உன்னாவ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட எம்.எல்.ஏ-வை கட்சியிலிருந்து நீக்கியது பாஜக!

4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள செங்காருக்கு எதிராக தொடர்ந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது. 

Lucknow:

உத்தர பிரதேச உன்னாவில் நடந்த பாலியல் சம்பவத்தில் குற்றம் சுமத்தப்படுள்ள எம்.எல்.ஏ-வான குல்தீப் சிங் செங்காரை, கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளது பாஜக. 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள செங்காருக்கு எதிராக தொடர்ந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர் உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது வழக்கறிஞர் மற்றும் உறுவினர்கள் சென்ற காரின் மீது, பதிவு எண் இல்லாத லாரி மோதியது. பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய இந்த விபத்து சம்பவத்தில், அந்தச் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு அவர் தொடர்ந்து போராடி வருகிறார். 

தற்போது இந்த சம்பவம் குறித்தும் செங்கார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ அமைப்பு, இது குறித்து விசாரணை செய்து வருகிறது. 

கடந்த ஓர் ஆண்டாக எம்.எல்.ஏ செங்கார் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் பாஜக எடுக்கவில்லை என்பதை முன்வைத்து, பல தரப்பினரும் கண்டனம் செய்து வந்தனர்.

உன்னாவ் விவகாரத்தில் சம்பந்தமுடைய 4 வழக்குகள் உத்தர பிரதேசத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த வழக்குகளை டெல்லிக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர்தான் எம்.எல்.ஏ செங்கார் தரப்பிடமிருந்து தங்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிபக்குக் கடிதம் எழுதியது. 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டார். அப்போதிலிருந்து இப்போது வரை இந்த வழக்கில் பெரிய முன்னேற்றம் இல்லாததைத் தொடர்ந்து நீதிமன்றம், சிபிஐ-யிடம் வழக்கு முன்னேற்றம் குறித்து அறிக்கை கேட்டுள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு, செங்கார் வீட்டுக்கு வேலை கேட்ட சென்றுள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி. அப்போதுதான் செங்கார் மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்துகிறார் அந்தச் சிறுமி. 

இது குறித்து காவல் நிலையத்தில் அந்தச் சிறுமி புகார் கொடுத்தும், அவரது புகார் ஏற்கப்படவில்லை. தொடர்ந்து அவர் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டுக்கு முன்னர் போராட்டம் செய்தார். புகார் ஏற்கப்படவில்லை என்றால், தீயிட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன் ஏன்று மிரட்டினார். அதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

Newsbeep