This Article is From Feb 24, 2019

பாஜக நெருக்கடி! - டிடி ஸ்போர்ட்ஸ் குவிஸ் நிகழ்ச்சியிலிருந்து சுமந்த் சி ராமன் நீக்கம்!

டிடி பொதிகை தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் குவிஸ் என்னும் விளையாட்டு நிகழ்ச்சி 17 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது

பாஜக நெருக்கடி! - டிடி ஸ்போர்ட்ஸ் குவிஸ் நிகழ்ச்சியிலிருந்து சுமந்த் சி ராமன் நீக்கம்!

டிடி பொதிகை தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் குவிஸ் என்னும் விளையாட்டு நிகழ்ச்சி கிட்டத்தட்ட வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில், தற்போது திடீரென இந்த நிகழ்ச்சியில் இருந்து சுமந்த் சி ராமன் நீக்கப்பட்டுள்ளார்.

தான் நீக்கப்பட்டது குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுமந்த் சி ராமன், அன்பு நண்பர்களே! தூர்தர்ஷன் சேனலில் நடைபெற்று வரும் பி.எஸ்.என்.எல். ஸ்போர்ட்ஸ் குவிஸ் நிகழ்ச்சியில் இனி நான் பங்கேற்க மாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது அரசியல் தொடர்பான கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் நான் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சேனலின் ஸ்போர்ட்ஸ் குவிஸ் நிகழ்ச்சியை தொடர அனுமதிக்கப்படவில்லை.

கடந்த 2002-ல் இருந்து ஸ்போர்ட்ஸ் குவிஸ் நிகழ்ச்சியை வழங்கி வந்ததை நான் கவுரவமாக கருதுகிறேன். எனக்கு ஆதரவாக இருந்த நேயர்கள், டிடி பொதிகை, பி.எஸ்.என்.எல். நிறுவனம் உள்ளிட்டவற்றுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் நாங்கள் எஸ்.எம்.எஸ். ஈ-மெயில் மூலம் போட்டிகள் நடத்தி புதுமைகளை அறிமுகப்படுத்தினோம்.
1000 தொடர்களை கடப்போம் என்று எதிர்பார்த்தேன். கடந்த வாரத்துடன் 873-வது தொடர் முடிந்தது. தனிப்பட்ட முறையில் ஸ்போர்ட்ஸ் குவிஸ் எனக்கு புகழையும், நலம் விரும்பிகளையும் உலகம் முழுவதும் ஏற்படுத்தி தந்தது. கடந்த 17 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை நடத்தினேன்.

ஆனால் கடந்த 3-4 ஆண்டுகளாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று எனது கருத்துகளை தெரிவித்தேன். இவை தேசிய ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டதன் காரணமாக பாஜக ஆதரவாளர்கள் என்னை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்தனர். 2014-15-ல் அப்போது டிடி இயக்குனராக இருந்த ராமச்சந்திரா என்னிடம் அவருக்கு வந்த எஸ்.எம்.எஸ்.-ஐ காட்டினார். அதில் என்னை பணியில் இருந்து நீக்குமாறு பாஜக மாநில நிர்வாகிகள் செய்தி அனுப்பியிருந்தனர்.

இதேபோன்று பிரசார் பாரதிக்கும் என்னை நீக்க வலியுறுத்தி கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. கடந்த வாரம் என்னை பணியில் இருந்து நீக்கி விட்டதாக ஸ்போர்ட்ஸ் குவிஸ் நிகழ்ச்சி தலைவர் என்னிடம் தெரிவித்தார். மேலதிக காரணம் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். விவாதங்களில் கருத்துக்களை தெரிவிக்கும்போது நான் நடுநிலையாகவே தெரிவித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

.