This Article is From Jan 23, 2019

நாடளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியா? ஜெயக்குமார் பதில்

கூட்டணி தொடர்பாக, தனிப்பட்ட முறையில்தான் அத்வாலே கருத்து கூறியுள்ளார்; அது பாஜக தலைமையின் கருத்து அல்ல.

நாடளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியா? ஜெயக்குமார் பதில்


தற்போதைக்கு யாருடனும் கூட்டணி இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று புதுச்சேரி வந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்த போது, எதிர்க்கட்சி கூட்டணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இணைந்துள்ளதால், மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவளிக்கும். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் பாஜகவுடன் இணைய வேண்டும். ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்தது போன்று இரு அணிகளும் இணைய வேண்டும். இது தொடர்பாக தினகரனை சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூட்டணி தொடர்பாக மத்திய அமைச்சர் அத்வாலே மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரின் கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்து பேசிய ஜெயக்குமார், அனைத்துக்கும் அதிமுக ஜால்ரா அடிக்காது, அன்னப்பறவை போல் பிரித்து பார்க்கும். எதிர்க்க வேண்டியதை எதிர்க்கும், ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கும்.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல, பாஜக கூட்டணியில் உள்ளவர். எனவே, கூட்டணி தொடர்பாக, தனிப்பட்ட முறையில்தான் அத்வாலே கருத்து கூறியுள்ளார்; அது பாஜக தலைமையின் கருத்து அல்ல.

பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே, அது அதிமுகவின் கருத்து அல்ல. தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்.

தமிழகத்திற்கு நல்லது செய்பவர்களுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும். தற்போதைக்கு யாருடனும் கூட்டணி இல்லை என்று அவர் கூறினார்.
 

.