
பீகாரில் இடி, மின்னலுக்கு 88 பேர் உயிரிழப்பு! பிரதமர் மோடி இரங்கல்
ஹைலைட்ஸ்
- பீகாரில் இடி, மின்னலுக்கு 88 பேர் உயரிழப்பு! பிரதமர் மோடி இரங்கல்
- உத்தர பிரதேசமும் இடி, மின்னலால் பாதிக்கப்பட்டுள்ளது
- பீகாரில் உள்ள 23 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியதில் 88 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக அங்கு பெய்த மழையால் கட்டிடங்கள், வீடுகளுக்கு கடுமையான சோதம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியதாவது, பீகாரில் உள்ள 23 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக கோபால்கான்ஜ் எனும் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, உத்தர பிரதேசமும் இடி, மின்னலால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதமர் மோடி இந்த சம்பவத்திற்கு வேதனை வெளிப்படுத்தியதோடு, மாநில அரசு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் பலத்த மழை மற்றும் மின்னல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர் என்ற சோகமான செய்தி கிடைத்தது. மாநில அரசுகள் உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன ”என்று அவர் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்னல் தாக்குதலால் வீடுகள் உள்ளிட்ட, குடியிருப்பாளர்களின் சொத்துக்களுக்கும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதைத்தொடர்ந்து, பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அறிவித்துள்ளார். இதேபோல், புயல் சமயத்தில் அனைவருமே விழிப்புடன் இருக்கவும், முடிந்தவரை வீட்டிற்குள் இருக்கவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோல், இந்த சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், "உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் பலத்த மழை மற்றும் மின்னல் காரணமாக பலர் உயிரிழந்ததில் நான் மிகுந்த வேதனையடைந்தேன். இரு மாநிலங்களிலும் நிவாரணப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் "என்று அவர் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார். .
Very disturbed by the death of 83 persons in lightning strikes and storms in Bihar, especially in Gopalganj district. People of Bengal stand by the affected people and express condolences to the families of the deceased.
— Mamata Banerjee (@MamataOfficial) June 25, 2020
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
"பீகாரில் மின்னல் காரணமாக 83 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இந்த துக்கத்தை தாங்க கடவுள் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு பலம் அளிக்கட்டும்" என்று அவர் இந்தியில் தனது ட்விட்ட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், "பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு முடிந்த அளவில் அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சியினருக்கு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.