ஆளுநர் ஜெகதீப் தன்காரின் காரை கறுப்புக்கொடிகளுடன் முற்றுகையிட்ட பல்கலைக்கழக மாணவர்கள்
கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்காரின் காரை கறுப்புக்கொடிகளுடன் முற்றுகையிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் அவருக்கு எதிராக 'கேபேக் தன்கார்' என்று கோஷங்களை எழுப்பினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்த சட்டத்திற்கு ஆதரவாக ஆளுநர் ஜெகதீப் கருத்து தெரிவித்து வந்தார். இதைத்தொடர்ந்து, பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பல்கலைக்கழகம் வந்த அவர் மாணவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதுதொடர்பாக ஆளுநர் ஜெகதீப் தன்கார் கூறும்போது, இது போன்ற சூழ்நிலையை கட்டுப்படுத்தாமல், பல்கலைக்கழகம் எவ்வாறு அனுமதிக்கிறது என்பது எனக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிக்கிறது. இதை ஒட்டுமொத்த அமைப்பின் சரிவாகவே பார்க்கிறேன்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கவும், அவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பிக்கவும் ஜாதவ்பூர் பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்காருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், அவருக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல், துணை வேந்தரே மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
The number of those obstructing is only around fifty. System being held hostage and those enjoined with the task are oblivious of their obligations. A collapse that can only lead to unwholesome consequences. Rule of law is no where in sight. As constitutional head concerned.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019
ஜாதவ்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் வேண்டுமென்றே தனது கடமைகளை மறந்து, போலிதனங்களை தேடுகிறார் என்பது வேதனையானது. சட்டத்தின் மொத்த சரிவுக்கும் அவர் தலைமை தாங்குகிறார் என்று ஆளுநர் ஜெகதீப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள ஆளுநர் அங்கு சென்ற போதும், பல்கலைக்கழக மாணவர்கள் அவருக்கு கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களின் பெருந்திரள் போராட்டத்தை தாண்டி தான் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆளுநரால் செல்ல முடிந்தது.
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க ஆளநர் முன்வந்த போது, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான டெல்லி போலீசாரின் தாக்குதல் குறித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையடுத்து, மாணவர்களுன் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் ஆளுநர் அமைதி காத்தார். தொடர்ந்து, அவர் பல்கலைக்கழத்தை விட்டு கிளம்பும் போது, மாணவர்கள் அவருக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.