This Article is From Sep 13, 2019

மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்கக் கூடாது: அதிமுக தலைமை

ஆர்வ மிகுதியால், விளைவுகளை அறியாமல் சிலர் செய்யும் செயலால், மக்கள் பாதிக்கப்படும் செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது எனவும் அதிமுக தெரிவித்துள்ளது.

மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்கக் கூடாது: அதிமுக தலைமை

மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்க கூடாது - அதிமுக

மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்க வேண்டாம் என அதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

முன்னதாக, சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சுபஸ்ரீ, நேற்று பிற்பகல் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, சாலையின் மீடியனில் அதிமுக பிரமுகர் ஒருவர் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது.

இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.  

இந்நிலையில், அதிமுகவினரின் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற மற்றுமொரு இளம்பெண் உயிர் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கழக நிர்வாகிகள் அனைவரையும் நான் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன்.

இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நான் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவோ, கூட்டமாகவோ இருந்தால் அதில் நான் பங்கேற்க மாட்டேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைப்பதை நிறுத்த வேண்டும் என அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

கட்சி, இல்ல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்க வேண்டாம் என அதிமுக கேட்டுக் கொண்டுள்ளது. ஆர்வ மிகுதியால், விளைவுகளை அறியாமல் சிலர் செய்யும் செயலால், மக்கள் பாதிக்கப்படும் செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது எனவும் அதிமுக தெரிவித்துள்ளது.
 

.