This Article is From Jul 30, 2018

வைரலான முத்தப் புகைப்படம், வங்கதேசப் புகைப்படக்காரர் பணி நீக்கம்

"ஒரு புகைப்படம் இத்தனைக் கதைகளை உருவாக்கும் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை"

வைரலான முத்தப் புகைப்படம், வங்கதேசப் புகைப்படக்காரர் பணி நீக்கம்

டாக்கா பல்கலைக் கழக படிகளில் மழை நேரத்தில் முத்தமிட்டுக்கொண்டபோது புகைப்படம் எடுக்கப்பட்ட காதல் ஜோடி

விரும்பத்தகாத கொடுமைக்குத் தான் ஆளாகியிருப்பதாக பணி நீக்கம் செய்யப்பட்ட பிரபல வங்கதேசப் புகைப்படக்காரர் ஜிபான் அகமது தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் வங்கதேசத்தில் அவர் எடுத்த முத்தப் புகைப்படம் கடும் புயலைக் கிளப்பியுள்ளது.

ஜிபான் பணியாற்றி வந்த செய்தித்தளமான பூர்பொபச்சிம்பாத், "ஜிபான் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றத் தகுதியற்றவர். அவர் எடுத்த புகைப்படம் திட்டமிட்ட ஜோடனையாக இருக்கலாம் என்ற ஐயமுள்ளது" என்று கூறி அவரைப் பணிநீக்கம் செய்துள்ளது.

இதனை மறுக்கும் ஜிபான், "என் புகைப்படம் இரு காதலர்கள் முத்தம் கொடுத்துக் கொண்டபோது எதேச்சையாக எடுக்கப்பட்டதே. இவ்விவகாரத்தில் பிற பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் என்னைத் தாக்கினார்கள்" என்று விளக்கமளித்துள்ளார்.
 

 
 

ஆற்றல் வாய்ந்த என் புகைப்படத்தால் நான் விரும்பத்தகாத கொடுமைக்கு ஆளாகியிருக்கிறேன் என்று தனது முகநூல் பக்கத்தில் ஜிபான் பதிவிட்டுள்ளார்.

"ஒரு புகைப்படம் இப்படிப் பல கதைகளைக் கிளப்பிவிடும் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இப்புகைப்படத்தால் சமூக ஊடகங்களிலும் பிற ஊடகங்களிலும் என்னைப் பற்றிப் பல பொய்யும் உண்மையுமான கதைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. பல புகைப்படக்காரர்கள் என்னுடன் தகராறில் ஈடுபட்டனர். அதல் ஒருவர் என்னை அறைந்துவிட்டார். நான் அவர்களிடம் எனது புகைப்படம் தூய்மையான அன்பின் அடையாளம் என்று கூறினேன்" என்று ஜிபான் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக ஜிபான், டாக்கா பல்கலைக்கழகத்தின் படிகளில் அமர்ந்து மழையினூடே இரு காதலர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக்கொள்ளும் புகைப்படத்தை 'மழையின் பாடல்கள் - காதலை சுதந்திரமாக இருக்க விடுவோமாக' என்ற தலைப்போடு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் பணியாற்றி வந்த தளத்திலும் இது வெளியானது. உடனடியாக இது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய்ப் பரவியது. பலரும் சமூக வெளிகளில் சுதந்திரத்தைக் குறிக்கும் இப்படத்தைப் பாராட்டினர். ஆனால் பழமைவாதிகள் அநாகரிகமானது என்று சாடினர். வங்கதேசத்தின் பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய மாண்பை மீறி விட்டதாகக் கொதித்தனர். இப்புகைப்படம் காதலர்களின் அனுமதி பெற்று எடுக்கப்பட்டதா என்று ஊடகத்தினரும் கேள்வி எழுப்பினர்.
 

 
 

இதையடுத்து ஜிபான் பணிபுரியும் பூர்பொபச்சிம்பாத் செய்தித்தளம் புகைப்படத்தை வெளியிட்ட பிறகு, ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் இப்புகைப்படம் ஜோடனை செய்யப்பட்டு முன் ஏற்பாட்டில் எடுக்கப்பட்டதாக தாம் நம்புவதாகவும் இதற்காக, புகைப்படக்காரர் மன்னிப்பு கேட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.

அச்செய்தித்தளத்தின் ஆசிரியர் குஜிஸ்தா நூர்-எ-நஹாரின் கூறுகையில், "புகைப்படம் உண்மையிலேயே எதேச்சையாக எடுக்கப்பட்டதா, ஏன் பிற புகைப்படக்காரர்கள் உங்களைத் தாக்கினார்கள், நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்டீர்கள், இப்புகைப்படத்தில் தொழில்முறை மாடல்கள் பயன்படுத்தப்பட்டனரா... என்றெல்லாம் ஜிபானிடம் விளக்கம் கேட்டிருந்தோம். ஆனால் அவர் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. அவர் எமது நிறுவனத்தின் மரியாதையைக் குலைத்துவிட்டார்" என்றார்.

ஆனால் ஜிபான் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தன்னிடம் அப்புகைப்படம் உண்மையானது என்பதற்கான ஆதாரம் இருப்பதாகவும், எனினும் தனது மனசாட்சி சக பத்திரிகையாளர்கள் மீது வழக்குத் தொடர விடாமல் தன்னைத் தடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

புகைப்படத்தில் முத்திமிட்டுக்கொள்ளும் காதல் ஜோடி இதுவரை இந்த சர்ச்சைள் பற்றி வாயே திறக்கவில்லை என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.

Click for more trending news


.