’டிக் டாக்’ செயலிக்கு தடை: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

TikTok App Ban: டிக் டாக் செயலியை பயன்படுத்தும் குழந்தைகள் பாலியல் வேட்டையாளர்களின் தூண்டுதலுக்கு ஆளாக நேரிடும் என டிக் டாக் செயலிக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

’டிக் டாக்’ செயலிக்கு தடை: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

TikTok App India Ban: சுமார் 5.4 கோடி மக்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

ஹைலைட்ஸ்

  • டிக் டாக்கை தரவிறக்கம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்த
  • இதனால் குழந்தைகள் பாலியல் வேட்டையாளர்களின் தூண்டுதலுக்கு ஆளாக நேரிடும்.
  • குறும் வீடியோக்களை உருவாக்கி பகிர இந்த செயலி உதவுகிறது.
Chennai:

TikTok India Ban: பிரபல சீன வீடியோ செயலியான டிக் டாக்கை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், டிக் டாக் செயலி 'ஆபாசத்தை ஊக்குவிக்கிறது' என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல், பிராங்க் ஷோவுக்கு வீடியோ எடுக்கவும், அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவிவரும் டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும். இந்த செயலியை இளைஞர்கள் மற்றுமின்றி சிறுவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இப்படி அளவுக்கு அதிகமாக அனைவராலும் பயன்படுத்தப்படும் இந்த செயலியை பல இளைஞர்கள் தவறான வகையில் பயன்படுத்துகிறார்கள். அதன் விளைவாக சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தோனேசியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி டிக் டாக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. "புளூவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை நீதிமன்றம் தலையிட்ட பின்னரே மத்திய அரசு தடை செய்தது. அதுபோல சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடை விதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயல வேண்டும்" என, கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, டிக் டாக் செயலியைத் தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதையடுத்து வழக்கறிஞர் முத்துக்குமார் தரப்பில், "பிராங்க் ஷோ வீடியோ எடுப்பதற்கான செயல்களால் தனி நபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. ஒரு சிலர் இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சிக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆகையால் அதற்கும் தடை விதிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், பிராங் ஷோவுக்கு வீடியோ எடுக்கவும், அதனை தொலைக்காட்சிகளில் வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதுதொடர்பாக டிக் டாக் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறும்போது, நாங்கள் உள்ளூர் சட்ட விதிகளை மதிக்கிறோம். நீதிமன்ற உத்தரவின் படி தேவையான நடவடிக்கையை எடுப்போம் என்றும் நீதிமன்ற உத்தரவின் நகலுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

மேலும், பாதுகாப்பான மற்றும் நேர்மறை பயன்பாட்டு சூழலைப் பராமரிப்பதற்கே நாங்கள் முன்னுரிமை வழங்குவோம் என்று அவர் கூறியுள்ளார்.

Listen to the latest songs, only on JioSaavn.com