"கொடிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் தமிழ்நாடு அரசின் இந்த உண்மையான நோக்கத்தை புரிந்து கொண்டு..."
ஹைலைட்ஸ்
- முன்பு தன்னார்வலர்கள் பொருட்கள் வழங்க கட்டுப்பாடுகள் விதித்தது அரசு
- அரசின் அறிவிப்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன
- தற்போது தன் அறிவிப்பில் மாற்றம் செய்து விளக்கம் கொடுத்துள்ளது அரசு
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஊரடங்கு உத்தரவை மீறி பொது வெளியில், மக்களுக்குப் பொருட்களை விநியோகம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் அறிக்கை வெளியிட்டது.
இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு நேற்று, “கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சில மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மக்களுக்கு உதவுவதாகக் கூறிக் கொண்டு, சமைத்த உணவையும், பொருட்களையும் விநியோகம் செய்வதாக ஊடகங்கள் மூலமாக தெரிய வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்த்து, அதன் மூலம் சமூக இடைவெளியை பின்பற்றி தொற்று நோய் பரவுவதைத் தடுக்கவே, ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்களும், பல்வேறு அமைப்புகளும் வழங்க விரும்பும் நிதியை, முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், பொருட்களாக வழங்க விரும்பினால், மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கருதி, அவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், “அரசு நேற்றைய தினம் (12/04/2020) வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளன.
சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படத்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளதே தவிர, யாருக்கும் தடை விதிக்கவில்லை. மாறாக விருப்பத்தோடு வரும் தன்னார்வலர்கள் மற்றும் இதர தொண்டு நிறுவனங்களின் நிவாரண உதவிகள், மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டு, தேவைப்படும் பொது மக்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்றடைவதை உறுதி செய்யத்தான் அரசு அறிவுறுத்தியதே தவிர, தடை விதிக்கவில்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்வதற்கு அரசு தடை விதித்துவிட்டது போல் உண்மைக்குப் புறம்பாய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் அரசு, எந்த விதமான அரசியலும் செய்யவில்லை. கொடிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் தமிழ்நாடு அரசின் இந்த உண்மையான நோக்கத்தை புரிந்து கொண்டு, அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.