This Article is From Nov 09, 2019

அயோத்தி தீர்ப்பு அரசியல் தலையீட்டின் வெளிப்பாடாகவே தெரிகிறது: திருமாவளவன்

பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் அகழ்வாய்வில் அங்கே கோவில் எதுவும் இல்லை என்னும் போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்றம்தானே. சாஸ்திரங்களின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அயோத்தி தீர்ப்பு அரசியல் தலையீட்டின் வெளிப்பாடாகவே தெரிகிறது: திருமாவளவன்

இந்து அமைப்புகள் என்ன ஆவணங்கள் ஒப்படைத்தனர் என்ற கேள்வி எழுகிறது. 

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசியல் தலையீட்டின் வெளிப்பாடாகவே தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

அயோத்தி நிலபரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர். சன்னி பிரிவுக்கு ஷியா வக்ப் வாரியம் தொடர்ந்து மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்படி, பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்கள் இடம் என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை என்றும், 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  

மேலும், 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதோடு, அயோத்தியில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மத்திய, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் கோயில் கட்டுவதற்கான அமைப்பை 3 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும், நிலத்தை மத்திய அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாபர் மசூதி வழக்குத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தையும் ஆதாரங்களையும் வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும் சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது.

பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் அகழ்வாய்வில் அங்கே கோவில் எதுவும் இல்லை என்னும் போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்றம்தானே. சாஸ்திரங்களின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க அளித்துள்ள தீர்ப்பு, நீதியை நிலைநாட்டும் முயற்சியாக இல்லாமல், சமரச முயற்சியாகவே இருக்கிறது. ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்பதை போல, பாபர் மசூதி கட்டவும் ஏன் அறக்கட்டளை நிறுவ கூடாது? இஸ்லாமியர்கள் உரிய ஆவணங்களை ஒப்படைக்கவில்லை எனில் இந்து அமைப்புகள் என்ன ஆவணங்கள் ஒப்படைத்தனர் என்ற கேள்வி எழுகிறது. 

சாஸ்திரங்கள் அடிப்படையில் இந்துக்களின் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து மொத்த இடத்தையும் இந்துக்களுக்கே வழங்கி இருப்பது அரசியல் தலையீட்டின் வெளிப்பாடாகவே தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

.