This Article is From Jan 29, 2019

ராமர் கோயில் விவகாரத்தில் முக்கிய மனுவை தாக்கல் செய்தது மத்திய அரசு

67 ஏக்கர் நிலம் 25 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது. அதில்2.7 ஏக்கர் நிலத்தில்தான் பிரச்னை நீடித்து வருகிறது.

ராமர் கோயில் விவகாரத்தில் முக்கிய மனுவை தாக்கல் செய்தது மத்திய அரசு

ஸ்டேட்டஸ் - கோ எனப்படும் தற்போதுள்ள நிலையை நீக்கி சர்ச்சையில்லா நிலத்தை வழங்க வேண்டும் என்கிறது மத்திய அரசு.

ஹைலைட்ஸ்

  • பிரச்னை அல்லாத இடத்தை ஒப்படைக்குமாறு மத்திய அரசு கோருகிறது.
  • 67 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலம்தான் பிரச்னைக்குரியதாக உள்ளது
  • சட்டப்படி தீர்வு காணப்படும் என்கிறார் பிரதமர் மோடி.
New Delhi:

ராமர் கோயில் விவகாரத்தில் முக்கிய திருப்பமாக மத்திய அரசு புதிய மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் பிரச்னைக்குரிய இடத்தை தவிர்த்து மற்ற இடங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அதனைச் சுற்றி மொத்தம் உள்ள 67 ஏக்கர் நிலமும் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு சென்றது. மொத்த நிலம் 67 ஏக்கராக இருப்பினும் 2.7 ஏக்கர் நிலத்தில்தான் தற்போது பிரச்னையும் வழக்கும் உள்ளது. 

இந்த 2.7 ஏக்கர் நிலத்தை தவிர்த்து மற்ற இடத்தை தங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த நடவடிக்கையை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது. 

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அளித்த பேட்டியில், ராமர் கோயில் வழக்கு எந்தவித தாமதமும் இன்றி விரைந்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். 70 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறிய அவர், வெகு விரைவில் அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

அயோத்தி வழக்கை விசாரிக்கு நீதிபதிகள் அமர்வில் இருந்து யுயு லலித் விலகினார். இந்த வழக்கில் தான் வழக்கறிஞராக இருந்ததால் விலகுவதாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து நீதிமன்ற அமர்வை மாற்றி அமைத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் அசோக் புஷான் ஆகியோரை நீதிபதிகள் அமர்வில் சேர்த்தார். 

வலது சாரி இந்துத்துவ அமைப்புகள் அவசர சட்டம் கொண்டு வந்து ராமர் கோயிலை கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சட்டத்தின்படியே தீர்வு காணப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

.