This Article is From Jan 06, 2020

ஜேஎன்யூ தாக்குதல் 26/11 தீவிரவாத தாக்குதலை நினைவுப்படுத்துகிறது: உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் உள்ள இளைஞர்களுக்கு இதுபோன்று எவ்வித சம்பவங்களும் நிகழாது என உறுதி அளிக்கிறேன். அவர்கள் முற்றிலும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என தாக்கரே தெரிவித்துள்ளார்.

ஜேஎன்யூ தாக்குதல் 26/11 தீவிரவாத தாக்குதலை நினைவுப்படுத்துகிறது: உத்தவ் தாக்கரே

ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடந்த முகமூடி கும்பல் தாக்குதலைஉத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.

New Delhi:


ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடந்த முகமூடி கும்பல் தாக்குதலை 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலுடன் ஒப்பிட்ட மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, இது கோழைத்தனமான செயல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறையினர் விரைவாகவும், தீர்க்கமாகவும் செயல்படுமாறு கேட்டுக்கொண்ட அவர், அவ்வாறு காவல்துறை செயல்பட தவறினால், ஏற்கனவே ஜாமியா மாணவர்கள் போராட்டத்தை கையாண்டதற்காக கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து அவர்களிடம் கேள்வி எழும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

"நான் தொலைக்காட்சியில் நடந்த செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தேன், ஞாயிற்றுக்கிழமை இரவு ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதல் எனக்கு 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நினைவூட்டியது. மாணவர்கள் நாட்டில் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். 

மகாராஷ்டிராவில் உள்ள இளைஞர்களுக்கு இதுபோன்று எவ்வித சம்பவங்களும் நிகழாது என உறுதி அளிக்கிறேன். அவர்கள் முற்றிலும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். ஜேஎன்யுவில் நடந்ததை போன்று மகாராஷ்டிராவில் நிகழ்த்த நினைத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

3k5rv8kc

கும்பல் தாக்குதலில் காயமடைந்த ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் அயிஷி கோஷ். 


இளைஞர்கள் பயத்திலும் கோபத்திலும் உள்ளனர். அவர்கள் யாரும் கோழைகள் அல்ல. இளைஞர்களைத் தூண்டிவிட்டு வெடிகுண்டுகளை எரிய வேண்டாம். காவல்துறையினர் செயல்படவில்லை என்றால் காவல்துறை குறித்து கேள்வி எழ தான் செய்யும் என்று அவர் கூறியுள்ளார். 

நான் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால் குற்றவாளிகளின் முகமூடிகள் அகற்றப்பட வேண்டும், அது தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்கள் யார் என்பதற்கான தெளிவான படத்தை நமக்குத் தரும், ”என்றார்.

கையில் ஆயுதங்களை ஏந்தியபடி, 50க்கும் மேற்பட்டோர் முகமூடி அணிந்து ஜேஎன்யூ வளாகத்திற்குள் நுழைந்து 3 மணி நேரம் சுற்றி வந்துள்ளனர் எனினும், அவர்கள் யாரும் போலீசார் மற்றும் நிர்வாகத்தால் தடுத்து நிறுத்தப்படவில்லை. இந்த தாக்குதலில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட குறைந்தது 34 பேர் காயமடைந்துள்ளனர். 
 

v59e3sj8

சபர்மதி விடுதியே ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் முக்கியமான விடுதியாகும்.


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்றிரவு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி குண்டர்களை அடையாளம் காண சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் பதிவுகளின் ஸ்கிரின்ஷாட்டுகள், சிசிடிவி வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த தாக்குதல் சம்பவத்தில் காவல்துறையின் செயல்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை பல்வேறு புகார்கள் குவிந்ததை அடுத்து, போலீசார் முதல்கட்ட தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். 

டெல்லி காவல்துறையினர் இந்த வழக்கை குற்றப்பிரிவுக்கு ஒப்படைத்துள்ளனர். எனினும், இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கலவரம் மற்றும் பொதுச்சொத்துகளை சேதப்டுத்தியது தொடர்பான குற்றச்சாட்டு
பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.   

எங்களுக்கு இரு தரப்பிலிருந்தும் புகார்கள் வந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். எஃப்ஐஆர் பதிவுசெய்துள்ளோம், ஒரு சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோக்கள் மற்றும் சிசிடிவி வீடியோக்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் சந்தேக நபர்களை அடையாளம் காணப்பட்டு வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். 

.