This Article is From Aug 16, 2018

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம்: பிரபலங்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம்: பிரபலங்கள் இரங்கல்
New Delhi:

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93. சிறுநீரக தொற்று காரணமாக கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாயின் உடல் நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது. இதையடுத்து, இந்திய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜூன் 11-ம் தேதி முதல் 9 வாரங்களாக வாஜ்பாயின் உடல்நிலை சீராக இருந்தது. ஆனால், கடந்த 36 மணி நேரத்தில் அவரது உடல் நிலை கடும் பின்னடைவை சந்தித்தது. தீவிர சிகிச்சையில் அவர் கண்காணிக்கப்பட்டு வந்தார். இருந்தபோதும், அவரை காப்பாற்ற முடியவில்லை’ என்று எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கவிஞர், பேச்சாளர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினர் என பன்முகத்தன்மை கொண்டவர் வாஜ்பாய். மூன்று முறை பிரதமர் பதவி வகித்தவர் வாஜ்பாய்.1996-ம் ஆண்டு 13 நாட்களும், 1998-ம் ஆண்டு 13 மாதங்களும், 1999-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளார். காங்கிரஸ் அல்லாது 5 ஆண்டுகள் முழுமையாக நீடித்த ஒரு ஆட்சி, வாஜ்பாயினுடைய ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்:

இமாச்சல பிரதேச மாநிலத்தில், அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்கூர், ‘அடல் பிஹாரி வாஜ்பாய், இமாச்சல பிரதேசத்தை அவரது இரண்டாவது வீடாக நினைத்து வந்தவர். அவருக்கு பிரினியில் ஒரு வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது’ என்று கூறியுள்ளார்.

‘அடல் பிஹாரி வாஜ்பாய், இந்தியாவின் உச்சபட்ச அரசியல்வாதி. தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் அர்ப்பணித்தவர்’ என்று பாஜக தலைவர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

‘ஒரு மிகப் பெரும் அரசியல்வாதியான வாஜ்பாயை இழந்தது என்னை வருத்தமடையச் செய்துள்ளது. அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்’ என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

‘அவர் பலரால் தனது அரவணைப்புக்காகவும், நகைச்சுவைக்காகவும் நினைவுகூறப்படுவார்’ என்று ரத்தன் டாடா கருத்து தெரிவித்துள்ளார்.

‘தன் சுயநலத்தை விட தேச நலனை முன்னிருத்தி உழைத்தவர் வாஜ்பாய். நம் நாட்டுக்கு அவர்தான் அரசியல் ஸ்திரத்தன்மை கொண்டு வந்தார். அவரின் அஸ்தி, உத்தர பிரதேசத்தில் இருக்கும் ஒவ்வொரு நதியிலும் கலக்கப்படும்’ என்று உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

‘வாஜ்யாயின் மரணம், இந்தியாவுக்கும் மட்டுமல்ல, ஜம்மூ - காஷ்மீர் மாநில மக்களுக்கும் பேரிழப்பாகும். எங்கள் மக்களின் துயரங்களை புரிந்து கொண்ட முதல் பிரதமர் அவர்தான்’ என்று மெஹுபூபா முப்டி கருத்து தெரிவித்துள்ளார்.

‘அடல் பிஹாரி வாஜ்பாய்தான், 65 ஆண்டுகளாக எனது நெருங்கிய தோழராக இருந்தார். அவருக்குக் கீழ் பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது’ என்று எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.

‘இந்தியா, அதன் ஒப்பற்ற மகனை இன்று இழந்துள்ளது. பல லட்சம் பேரால் வாஜ்பாய் மதிக்கப்பட்டு விரும்பப்பட்டவர். அவரது குடும்த்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்’ என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

‘அடல் பிஹாரி வாஜ்பாயின் மறைவு, தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பாகும். அவரது தலைமையின் கீழ்தான் 21 ஆம் நூற்றாண்டுக்கான மிக வலுவான அடித்தளம் நாட்டுக்கு அமைக்கப்பட்டது’ என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

.