இந்த இறுதிப்பட்டியலில் 3.11 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்.
Guwahati: அசாமில் இறுதி தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் இன்று வெளியானது. இதில், மொத்தமாக 3.11 கோடி பேர் அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளனர். இது 1951ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் இரண்டாவது குடிமக்கள் பட்டியலாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பின்னர், ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மிகப்பெரும் நடவடிக்கையை எடுத்தது. அதைத் தொடர்ந்து இன்று அடுத்த பெரும் நடவடிக்கையை எடுத்துள்ளது.
அண்டை நாடுகளில் இருந்து குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள இறுதிப்பட்டியலில் 19 லட்சத்து 6657 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
பலரின் பெயர் விடுபட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசாமில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே இறுதிப்பட்டியலில் இடம்பெறாதோர் இந்திய குடியுரிமையை நிரூபிக்க வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்ட நிலையில் தற்போது வெளியாகி உள்ள புதிய பட்டியலில் 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்காததால், 19 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 3.11 கோடி பேர் அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த இறுதி பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை என்றாலும், ஒரு நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்லிவிட முடியாது. அனைத்து சட்டப் பூர்வ அம்சங்களும் அவர்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்திலேயே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெறாதவர்கள், வெளிநாட்டவர்களுக்கான தீர்ப்பாயத்தில் அது குறித்து முறையிடலாம். பட்டியல் வெளியான 120 நாட்களுக்குள் தீர்ப்பாயத்தில் முறையிடப்பட வேண்டும்.
இந்த பெயர் பட்டியலை என்ஆர்சி அதிகாரப்பூர்வ இணையதளமான www.nrcassam.nic.in. என்ற இணையதளத்தில் சென்று சரிபார்க்கலாம். எனினும், இந்த பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியானதும் உடனடியாக இணையதளம் முடங்கியது. இணைய இணைப்பு இல்லாதவர்கள் தங்கள் நிலையை சரிபார்க்க மாநில அரசு அமைத்த சேவா கேந்திரங்களுக்குச் செல்லலாம்" என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்டிடிவிக்கு தெரிவித்துள்ளார்.
என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு உதவும் வகையில் 1,000 தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது 100 தீர்ப்பாயங்கள் திறக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் முதல் வாரத்தில் 200 தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட உள்ளது. தீர்ப்பாயத்தில் ஒருவருக்கு எதிராக தீர்புப வந்தாலும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்யலாம்.
அங்கும் அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டால் மட்டுமே மாநில அரசு அவர்களை கைது செய்யும்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
அசாமில் 18 சதவிகித மக்கள், பெங்காலி இந்துக்கள் ஆவர். அவர்கள், பாஜக-வுக்கு ஆதரவாக இருப்பவர்கள். அந்த மக்கள் பட்டியலில் இடம் பெறாதது குறித்து பாஜக கவலையடைந்துள்ளதாம்.
இந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அசாமில் மொத்தம் இருக்கும் 14 தொகுதிகளில் 9-ஐக் கைப்பற்றியது பாஜக. மாநிலத்தில் இருக்கும் பழங்குடியினர், அசாம் இந்துக்கள் மற்றும் பெங்காலி இந்துக்களின் வாக்குகள்தான் பாஜக-வின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.