This Article is From Nov 17, 2019

Sabarimala Temple Opens - பதற்றமான சூழலில் சபரிமலை கோயில் நடைதிறப்பு..!

நடை திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகளை கேரள அரசு செய்திருக்கிறது. 150 பேருந்துகள் பம்பை மற்றும் நிலக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.

சபரி மலை வழக்கு விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டை கோயில் நிர்வாகம் எடுத்துள்ளது.

Thiruvananthapuram:

பரபரப்பான சூழலில் சபரி மலையில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல சிறப்பு ஏற்பாடுகளை கேரள அரசு செய்திருக்கிறது. இந்நிலையில் ஆந்திராவிலிருந்து சபரிமலை கோயிலுக்கு வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. 

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அனைத்துப் பெண்களும் கோயிலுக்குச் செல்ல அனுமதி அளித்தது.

இதற்கு கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உச்சநீதிமன்றத்தின்  உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. 

வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு சென்றபோதிலும், அவர்கள் விசாரித்து தீர்ப்பு வழங்கும் வரையில் முன்னர் வழங்கப்பட்ட அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவு நடைமுறையில் இருக்கும். 

இந்த நிலையில் பிரச்னை ஏற்படாமல் இருக்க பெண்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று கேரள தேவசம் போர்டின் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். 

சாமி தரிசனத்தை முன்னிட்டு 150 சிறப்பு பேருந்துகள் பம்பை மற்றும் நிலக்கல்லில் இருந்து இயக்கப்பட உள்ளன. மருத்துவ வசதிக்காக 16 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு 800 மருத்துவ பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

2400 கழிவறைகள், 250 குடிநீர் வழங்கும் மெஷின்கள் உள்ளிட்டவை பக்தர்களின் வசதிக்காக நிறுவப்பட்டுள்ளது. சுகாதார பணியில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். 
 

.