தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில் ராகுல் திட்டவட்டம்! மீண்டும் கூடுகிறது காங்., காரிய கமிட்டி!

Congress Working Committee meeting: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதான தனது முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என கட்சியினரிடம் ராகுல் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

ஹைலைட்ஸ்

  • மற்றொறு காரிய கமிட்டி கூட்டத்தை மேற்கொள்ள காங்கிரஸ் திட்டமிடுகிறது.
  • நேரு-காந்தி குடும்பத்தினரே பெரும்பாலும் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தனர்.
  • ராகுலின் முடிவில் இருந்து மாற்றமில்லை என அவர் கட்சியினரிடம் கூறியுள்ளார்.
New Delhi:

கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இந்த வாரம் மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் இருக்கும் 542 தொகுதிகளில் 350 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ 90 தொகுதிகளை பெறவே கடும் போட்டியை எதிர்கொண்டு, நீண்ட இழுபறிக்கு பின்னர், அதுவும் குறைந்தபட்ச வாக்குகள் வித்தியாசத்திலே 90 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலின் சொந்த தொகுதியான அமேதியிலும் எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிர்தி இரானியிடம், ராகுல் கடும் தோல்வியை சந்தித்தார்.

எனினும், முன்னெச்சரிக்கையாக கேரளாவின் வயநாட்டிலும் ராகுல் போட்டியிட்டதால், அங்கு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். உத்தரபிரதேசத்தில் சோனியா காந்தி போட்டியிட்ட ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸால் வெற்றி பெற முடிந்தது.

இந்நிலையில், காங்கிரஸின் தோல்வி குறித்து ஆலோசிக்கும் வகையில், கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூடியது. இதில், ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று, தான் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், அவரது ராஜினாமாவை காரிய கமிட்டி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனினும், ராகுல் தனது ராஜினாமா செய்வதான முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க அவர் கட்சிக்கு கால அவகாசம் கொடுத்தாகவும் தெரிகிறது. ராகுலின் இந்த முடிவுக்கு அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. அவர்கள், கடந்த இரண்டு மூன்று நாட்களாக ராகுலை போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்' என்று வலியுறுத்தி வருகிறார்களாம். ‘ராஜினாமா செய்ய வேண்டாம். ஆனால், கட்சியில் பல விஷயங்களை மாற்றியமைக்கலாம்' என்றும் அவர்கள் அறிவுரையும் கூறியுள்ளார்களாம்.

இதேபோல், காரிய கமிட்டி கூட்டத்தின் போது ராகுல், காந்தி குடும்பத்தில் இருந்துதான் தலைவராக ஒருவர் வர வேண்டும் என்று அவசியமில்லை என்று பேசியிருக்கிறார். காங்கிரஸ் நிர்வாகிகள், பிரியங்காவின் பெயரை முன்மொழிந்துள்ளனர். அதனால் ராகுல், தன் சகோதரி, தாயாரை இதற்குள் இழுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியதாக கூறப்படுகிறது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ், 17 மாநிலங்களில் ஒரு இடத்தைக் கூட ஜெயிக்கவில்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களும் இதில் அடங்கும். டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.