This Article is From Aug 28, 2018

நெருக்கடி நிலையை நோக்கி இந்தியா: செயற்பாட்டாளர்கள் கைதுக்கு அருந்ததி ராய் கண்டனம்

டெல்லி, பரீதாபாத், கோவா, மும்பை, தானே, ராஞ்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள் வீடுகளில் இன்று சோதனை நடத்தப்பட்டது

நெருக்கடி நிலையை நோக்கி இந்தியா: செயற்பாட்டாளர்கள் கைதுக்கு அருந்ததி ராய் கண்டனம்
New Delhi:

பல நகரங்களிலும் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் மீது இன்று நடத்தப்பட்ட ரெய்டுகள் முற்றிலும் ஆபத்தான ஒரு போக்கு என்று பிரபல எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான அருந்ததி ராய் சாடியுள்ளார். நாடு மீண்டுமொரு நெருக்கடி நிலை அறிவிப்பை ஒட்டிய நிலையில் தற்போது உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜனவரி 1 அன்று பீமா கோரேகானில் நடந்த வன்முறையுடன் தொடர்புடையதாக ஒன்பது செயற்பாட்டாளர்களின் வீடுகளில் இன்று புனே போலிசார் சோதனை மேற்கொண்டனர். இதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“பட்டப்பகலில் கொலை செய்பவர்கள், குழு வன்முறையைத் தூண்டி விடுபவர்கள் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்படாமல்; வழக்கறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தலித் உரிமைப் போராளிகள், அறிவுஜீவிகள் ஆகியோரது வீடுகள் சோதனையிடப்படுவது நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. கொலைகள் கொண்டாடவும் கௌரவிக்கவும் படுகின்றன. இந்துப் பெரும்பான்மைவாதத்துக்கு எதிராகவோ நியாயம் கேட்டோ பேசுவோர் அனைவரும் குற்றவாளிகளாக்கப்படுகின்றனர்” என்று இதுபற்றி அருந்ததி ராய் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.

“வரும் தேர்தலுக்கான ஆயத்தம் இது. இதை நடக்க நாம் அனுமதிக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும். இல்லையெனில் இப்போது நாம் அனுபவித்து வரும் அனைத்து சுதந்திரங்களையும் இழப்போம். நெருக்கடி நிலை அறிவிப்பைப் போன்ற ஒரு சூழலை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

டெல்லி, பரீதாபாத், கோவா, மும்பை, தானே, ராஞ்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள் வீடுகளில் இன்று சோதனை நடத்தப்பட்டது.

பிரதமர் மோடியைக் கொலைசெய்யும் சதித்திட்டத்தில் பங்குபெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மாவோயிசக் கொள்கையாளரும் கவிஞருமான வரவர ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் எல்கர் பரிஷத் என்ற பெயரில் புனேவில் நடந்த நிகழ்ச்சியே மறுநாள் பீமா கோரேகான் வன்முறை நடைபெறத் தூண்டுகோல் என்று போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வரவர ராவின் பெயர் இடம்பெற்ற கடிதம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

1818இல் மராத்தா பேஷ்வாக்களுடன் நடந்த போரில் வென்றதன் 200வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் இருந்து தலித் மக்கள் பீமா கோரேகானில் டிசம்பர் 31 அன்று கூடினர்.

ஜனவரி ஒன்றாம் தேதி தலித் செயற்பாட்டாளர்களுக்கும் மராட்டிய சாதி இந்துக்களுக்கும் இடையே மூண்ட கலவரத்தில் பலர் காயமடைந்தனர், ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து மும்பை உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் இவ்வன்முறை பரவியது. 2,3 தேதிகளில் மாநிலம் தழுவிய கடையடைப்புக்குப் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

.