This Article is From Aug 17, 2019

தீவிர சிகிச்சையில் அருண் ஜெட்லி! - மத்திய அமைச்சர்கள் சந்திப்பு!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி (66), மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமைனயில் கடந்த வாரத்தில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சையில் அருண் ஜெட்லி! - மத்திய அமைச்சர்கள் சந்திப்பு!

அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

New Delhi:

டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் நேற்று நேரில் சென்று நலம் விசாரித்தனர். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அப்போதிருந்து ஜெட்லியின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகவில்லை.

இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். 

இதனிடையே, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பிற்பகலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மருத்துவமனைக்கு சென்று ஜெட்லியை சந்தித்தார். 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் நேற்று மருத்துவமனை சென்று அருண் ஜெட்லியின் உடல்நலன் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்துள்ளனர். 

முன்னதாக, புதிதாக அமைக்கப்படும் மத்திய அமைச்சரவையில் மீண்டும் தொடர விரும்பவில்லை என அருண் ஜெட்லி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், அதில் அனைத்து பொறுப்புகளிருந்தும் சிறிது காலம், விலகி இருக்க விரும்புகிறேன். இது எனது சிகிச்சையிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த உதவும் என்று அவர், கோரிக்கை விடுத்திருந்தார். தொடர்ந்து, மக்களவை தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை. 

கடந்த ஆண்டு மே 14ஆம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் நிதியமைச்சக பணியை அவருக்கு பதிலாக பியூஷ் கோயல் கூடுதலாக கவனித்து வந்தார். 
 

.