காஷ்மீரில் விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் 7 நாளில் மறுஆய்வு செய்யவும்: உச்சநீதிமன்றம்

கடந்த நவ.21ம் தேதி, சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட கடும் கட்டுபாடுகளை மத்திய அரசு நியாயப்படுத்தியிருந்தது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்றும், ஒரு துப்பாக்கி தோட்டா கூட பயன்படுத்தப்படவில்லை என்றும் பெருமையாக கூறியது.

காஷ்மீரில் விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் 7 நாளில் மறுஆய்வு செய்யவும்: உச்சநீதிமன்றம்
New Delhi:

ஒரு வாரத்தில் ஜம்மு-காஷ்மீரில் இணைய முடக்கத்தை திரும்பப் பெற பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இணையம் என்பது கருத்துரிமையின் ஒரு பகுதி என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கி வரப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இணைய முடக்கத்தை திரும்ப பெறுவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க வேண்டும். இதுபோன்ற முடக்கக்கங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்க முடியும், அதுவும் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டது என
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 

நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், காலவரையறை இன்றி இணையம் முடக்கப்படுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.  

சட்டப்பரிவு 19வது பிரிவுக்குள், "பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தில் இணைய உரிமையும் உள்ளது" என்று நீதிபதி என்.வி.ரமணா தீர்ப்பை வாசிக்கும் போது தெரிவித்தார். 

சட்டப்பிரிவு 370வது ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களில் ஜம்மு-காஷ்மீரில் அமல்படுத்தப்பட்ட அனைத்து தடை உத்தரவுகளும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும், எனவே அவை சட்டரீதியாக எதிர்த்து முறையீடு செய்யப்படலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், இணையதள சேவையை காலவவரையின்றி முடக்குவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும், நியாயமான கருத்து சுதந்திரத்தை 144 தடை உத்தரவு மூலம் ஒடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அரசாணையும் பிறப்பித்தது. இதனை அமல்படுத்தும் நடவடிக்கையாக அம்மாநில அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர்.

இணைய, மொபைல் சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 
 

More News