செங்கல்பட்டு சுங்கச்சாவடியை மீண்டும் திறக்க ஏற்பாடுகள் தயார்!

அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடியில் புதிய மின்னணு சாதனங்கள், மின் விளக்குகள், கண்காணிப்பு கேமரா, எலக்ட்ரானிக் கருவிகள் அனைத்தும் பொருத்தப்பட்டு தீவிரமாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

செங்கல்பட்டு சுங்கச்சாவடியை மீண்டும் திறக்க ஏற்பாடுகள் தயார்!

வரும் 25-ம் தேதி முதல் செங்கல்பட்டு சுங்கச்சாவடி மீண்டும் திறக்கப்படும் என தெரிகிறது. 

கடந்த ஒரு மாதமாகப் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக, கடந்த ஜன.26ம் தேதி செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் அரசு பேருந்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது.

இதில், ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தைச் சுங்கச்சாவடியின் குறுக்கே நிறுத்தியுள்ளார். இதனால் பின்னால் வந்த வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. இதனால், நீண்ட நேரமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து, பேருந்தினுள் பல மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். இதன்பின்னர் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். 

இதுதொடர்பாக பேருந்து ஓட்டுநர், சுங்கச்சாவடி ஊழியர்கள், பொதுமக்கள் சிலரைக் கைது செய்த போலீசார் பின்னர் விடுவித்தனர். இதனிடையே, சுங்கச்சாவடியில் ஏற்பட்ட கலவரத்தில் அங்கிருந்த பணம் காணாமல் போனதாகப் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், சுங்கச்சாவடி ஊழியர்களே அங்கிருந்த பணத்தைத் திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து, செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் ஜனவரி 26-ம் தேதி முதல் தற்போது வரை சுங்க கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு சுங்கச்சாவடியை மீண்டும் திறக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை இயக்குநரகம் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக, அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடியில் புதிய மின்னணு சாதனங்கள், மின் விளக்குகள், கண்காணிப்பு கேமரா, எலக்ட்ரானிக் கருவிகள் அனைத்தும் பொருத்தப்பட்டு தீவிரமாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

தொடர்ந்து, வரும் 25-ம் தேதி முதல் செங்கல்பட்டு சுங்கச்சாவடி மீண்டும் திறக்கப்படும் எனத் தெரிகிறது. 

Listen to the latest songs, only on JioSaavn.com