This Article is From Oct 04, 2019

‘சீன அதிபருக்கு அரசே பேனர் வைப்பதா..?’- விளாசும் Anbumani ராமதாஸ்!

“பதாகைகள் மற்றும் பேனர் வைக்கும் கலாசாரம் தேவையற்றது" - Anbumani Ramadoss

‘சீன அதிபருக்கு அரசே பேனர் வைப்பதா..?’- விளாசும் Anbumani ராமதாஸ்!

மற்ற மாநிலங்களுக்குச் சென்றாலோ, மற்ற நாடுகளுக்குச் சென்றாலோ இது போன்று பதாகைகளைப் பார்க்க முடியாது : Anbumani Ramadoss

சீன அதிபர் ஜி ஜின்பிங், சென்னை வருவதையொட்டி அவருக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் தமிழக அரசு பேனர் வைக்கவுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் பா.ம.க-வின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ். 

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, “பதாகைகள் மற்றும் பேனர் வைக்கும் கலாசாரம் தேவையற்றது. மற்ற மாநிலங்களுக்குச் சென்றாலோ, மற்ற நாடுகளுக்குச் சென்றாலோ இது போன்று பதாகைகளைப் பார்க்க முடியாது. ஆனால் தமிழகத்தில் பேனர் மற்றும் சுவரொட்டிகள் கலாசாரம் அதிகமாக இருக்கிறது. இதைத் தவிர்க்க வேண்டும். சீன அதிபர் தமிழகத்துக்கு வர இருப்பதால், அவருக்கு வரவேற்பு கொடுப்பதற்காக ஒரு விதிவிலக்கை தமிழக அரசு கேட்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றமும், பேனர் மற்றும் பதாகைகளை வைக்கக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கத்தான் சொல்லி இருக்கிறோம் என்று கூறியுள்ளது. என்னைப் பொறுத்தவரை அனைவரும் இந்த பேனர் கலாசாரத்தைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “இந்தியாவில் காலநிலை மாற்றம் குறித்து அவசர பிரகடனம் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து வலியுறுத்த உள்ளேன். நீட் தேர்வு சர்ச்சையைப் பொறுத்தவரை, 50-க்கும் மேற்பட்டோர் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக தெரிகிறது. அது குறித்து சிபிஐ அமைப்பு முறையாக விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்தார். 

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வரும் 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். இரு நாடுகளுக்கிடையிலான உறவு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது பேசுகின்றனர். பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையின்போது, சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை வரவேற்பு பேனர்கள் வைக்க அனுமதிக்கும்படி மத்திய, மாநில அரசுகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அக்டோபர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 14 இடங்களில் அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஏற்கனவே, தமிழத்தில் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருந்தும், சட்டவிரோதமாக பேனர் வைக்கப்பட்டு, இளம் பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.

இதனால், தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இது தமிழக அரசியலில் சர்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில், சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்று பேனர்கள் வைக்க அனுமதி வழங்கினர். விதிகளை பின்பற்றி, மக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர்களை வைக்கலாம் என்று கூறினர். 

.