தேசிய அரசியல் வட்டாரங்களில் இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடகாவில் (Karnataka)) ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (Congress-JDS) கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க அனைத்துத் திட்டங்களையும் போட்டது பாஜக தலைவர் அமித்ஷா (Amit Shah) தான் என்று கர்நாடக முதல்வராக இருக்கும் எடியூரப்பா (BS Yediyurappa) பேசியுள்ள ஆடியோ க்ளிப் லீக் ஆகியுள்ளது. தேசிய அரசியல் வட்டாரங்களில் இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எடியூரப்பாவிடம் கேள்வியெழுப்பியபோது, ‘கட்சியின் நலன் கருதி தொண்டர்களிடம் பேசியது தான் அது,' என்று அதிர்ச்சிகர பதிலைத் தந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி, பொறுப்பேற்று 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில் இந்த ஆடியோ லீக் செய்யப்பட்டுள்ளது.
ஆடியோவில் எடியூரப்பா, “17 எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைக்க நினைத்தது இந்த எடியூரப்பா இல்லை என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். கட்சியின் தேசியத் தலைவர்தான் அனைத்தையும் திட்டம் போட்டு நடத்தினார்.
மீதியுள்ள ஆட்சி காலம் முழுவதற்கும் நாம் எதிர்க்கட்சியாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் பதவிகளை ராஜினாமா செய்து நம்மை ஆட்சியில் அமரவைத்திருக்கிறார்கள். தற்போது அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார்கள். என்ன நடந்தாலும் அவர்களுக்குத் துணையாக நாம் இருக்க வேண்டும்.
நான் முதல்வராக பொறுப்பேற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 3, 4 முறை நான் முதல்வராக இருந்துவிட்டேன். தற்போது நான் ஒரு பெரும் குற்றம் இழைத்துவிட்டதாக நினைக்கிறேன்,” என்று கூறுகிறார்.
இந்நிலையில் லீக் செய்யப்பட்ட க்ளிப் குறித்து எடியூரப்பாவிடம், NDTV கேட்டபோது, “அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் பற்றி எங்கள் கட்சித் தரப்பில் சிலர் தேவையில்லாமல் பேசியிருந்தார்கள். கட்சிக்காக அவர்கள் அனைவருக்கும் ஆதரவளிக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
லீக் ஆன க்ளிப்:
@bsybjp again confesses about operation Kamala & the immoral defection of @INCIndia MLA's.
— ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್/ Dinesh Gundu Rao (@dineshgrao) November 1, 2019
He also clearly reveals that @AmitShah took care of the defectors for 2.5 months in Mumbai.
What more damning proof required that @BJP4India masterminded this entire operation. pic.twitter.com/Oi1PrbdsSN
இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு, கர்நாடகத்தில் ஆட்சி செய்து வந்தது. திடீரென்று காங்கிரஸைச் சேர்ந்த 14 பேர், மஜத-வைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ, அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். அவர்கள் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களாக மாறி, பாஜக பக்கம் சாய்ந்தனர். இதனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, பாஜக, ஆட்சி பொறுப்புக்கு வந்தது.
அதே நேரத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மீது கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களை தகுதி நீக்கம் செய்தார். அது தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.