''4 மாதங்களுக்குள் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் பணி தொடங்கும்'' : அமித் ஷா உறுதி!!

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்ட வேண்டாமா என்று அமித் ஷா கேட்டதற்கு, கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆம் என்று உற்சாகத்துடன் பதில் அளித்தனர்.

''4 மாதங்களுக்குள் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் பணி தொடங்கும்'' : அமித் ஷா உறுதி!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் நிறுத்தி வைத்ததாக அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

அயோத்தியில் 4 மாதங்களுக்குள் ராமர் கோயிலை கட்டும் பணி தொடங்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார். ஜார்க்கண்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு கட்சிகள் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன. பகூர் நகரில் பாஜக சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சரும், கட்சியின் தேசிய தலைவருமான அமித் ஷா பேசியதாவது-

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி விட்டது. இன்னும் 4 மாதங்களில் விண்ணை முட்டும் அளவுக்கு பிரமாண்டமான ராமர் கோயில் கட்டும்பணி அயோத்தியில் தொடங்கும். ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி தடையாக இருந்தது. இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததற்கும் அக்கட்சியே காரணம். நாட்டை பாதுகாக்கவும், குடிமக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் காங்கிரசுக்கு தெரியாது. 

இவ்வாறு அமித் ஷா பேசினார். 

கடந்த நவம்பர் 9-ம்தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இதன்படி, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலமானது வழக்குத் தொடர்ந்த ராம்லல்லாவுக்கு செல்ல வேண்டும் என்றும் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதியளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக முஸ்லிம் தரப்புக்கு 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக வழங்க வேண்டும். 

இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்திற்கு முன்னால், கட்டிடம் ஒன்று இருந்ததாக தொல்லியில் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் அது கோயில்தானா என்பது உறுதி செய்யப்படவில்லை. 1,045 பக்கம் உள்ள அயோத்தி தீர்ப்பில், முஸ்லிம்கள் பக்கம் வலுவான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'இரு தரப்பு விவாதங்கள், எடுத்து வைக்கப்பட்டட ஆதாரங்களின் அடிப்படையில் இந்துக்கள் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களும், ஆதாரங்களும் முஸ்லிம் தரப்பை விட வலுவானதாக இருந்தது' என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

More News