''உங்களுக்கு பாஸ் அமரிந்தர்தான்'' - சித்துவுக்கு டோஸ் விட்ட காங்கிரஸ்

பஞ்சாபில் முதல்வர் அமரிந்தர் சிங்குக்கும், அமைச்சர் சித்துவுக்கும் இடையே ஈகோ பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

பாகிஸ்தானுக்கு போகும் முடிவில் சித்து இருக்க அதற்கு அமரிந்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

New Delhi:

பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர்சிங் தான் உங்களுக்கு பாஸ். அவர் சொல்படி கேட்டு நடக்க வேண்டும் என்று அமைச்சர் சித்துவுக்கு காங்கிரஸ் அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் மாநிலம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கொஞ்சம் பிரபலமான நபர் சித்து. இவர் பஞ்சாப் மாநில அமைச்சராக இருந்து வருகிறார். மீடியாக்களில் மாநில முதல்வர் அமரிந்தரின் பெயர் வருவதைக்காட்டிலும் சித்துவின் பெயர்தான் அதிகம் வரும்.

சித்துவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கிரிக்கெட் வீரர்கள் என்பதால் இந்த நட்பு ஏற்பட்டது. இம்ரானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற சித்து, அங்கு வந்திருந்து பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டிப்பிடித்தார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அவரை கடுமையாக விமர்சித்தன.

தற்போது பாகிஸ்தானில் சீக்கிய கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்லப்போவதாக சித்து கூறி வருகிறார். இதற்கு அமரிந்தர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் ராணுவத்தில் இருந்தவர். அவரை கட்சிக்காரர்களும், அமைச்சர்களும் கேப்டன் என்றுதான் அழைத்து வருகின்றனர். பாகிஸ்தான் போவது தொடர்பான விவகாரத்தில் பேட்டியளித்த சித்து, எனக்கு கேப்டன் ராகுல்காந்தி. அவர் பேச்சை கேட்டு எங்கு வேண்டுமானாலும் செல்வேன் என்று கூறியிருந்தார்.

nmdhb9b8

இதையடுத்து அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது பேட்டியளித்துள்ள சித்து, ''கேப்டன் அமரிந்தர் சிங் எனக்கு அப்பாவைப் போன்றவர். அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். என்னையும் அவரையும் வைத்து தேவையற்ற வதந்திகளை கிளப்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த சித்துவை, காங்கிரஸ் தலைமையிடம் கடுமையாக கண்டித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமரிந்தர் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என சித்துவுக்கு உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்துதான், அமரிந்தர் தனக்கு அப்பா போன்றவர் என்று சித்து கூறியுள்ளார். சித்து அடித்திருக்கும் பல்டி பஞ்சாபில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.