‘2021ல் எங்கள் தலைமையில்தான் கூட்டணி!’- பாஜகவின் வி.பி.துரைசாமி உறுதி; அதிமுகவுக்கு கல்தாவா?

"2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் எங்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்"

‘2021ல் எங்கள் தலைமையில்தான் கூட்டணி!’- பாஜகவின் வி.பி.துரைசாமி உறுதி; அதிமுகவுக்கு கல்தாவா?

"களம் என்பது திமுக vs பாஜக என மாறியுள்ளது"

ஹைலைட்ஸ்

  • எங்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சியமைக்கும்: பாஜக
  • 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது
  • வி.பி.துரைசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று பேசியுள்ளார் வி.பி.துரைசாமி. சமீபத்தில் இவர் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவில், துணை பொதுச் செயலாளராக இருந்தவர் துரைசாமி. 

இன்று பாஜகவின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்ற வாரம் வரை தமிழக தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, திமுக vs அதிமுக என்கிற நிலைமைதான் இருந்தது. ஆனால், சட்டமன்ற உறுப்பினரான கு.க.செல்வம் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த பின்னர், களம் என்பது திமுக vs பாஜக என மாறியுள்ளது. 

நாங்கள் வெகு வேகமாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறோம். 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் எங்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்” என்று கூறினார். 

அதற்கு, ‘அப்படியென்றால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் நீங்கள் இருக்க மாட்டீர்களா?' எனக் கேட்கப்பட்டது.

“எங்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று தெளிவாக சொல்லிவிட்டேனே. அதிலேயே எல்லா கேள்விகளுக்கும் பதில் உள்ளதே” என்றார் துரைசாமி. 

தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் துரைசாமியின் இந்தக் கருத்தின் மூலம், வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்காது என்பது சூசகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் இதுவரை துரைசாமியின் கருத்துக்கு எந்த எதிர்வினையும் வரவில்லை.