This Article is From Jun 17, 2019

நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

Doctors' strike: இந்திய மருத்துவர்கள் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று, மருத்துவர்கள் இன்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் கடந்த வாரம் தங்களது போராட்டத்தை தொடங்கினர்.

New Delhi:

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேற்குவங்கத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நோயாளி ஒருவர் சமீபத்தில் இறந்தார். இதனால், ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் அங்கு பணியில் இருந்த இளநிலை மருத்துவர்கள் இருவரை சரமாரியாக தாக்கினர்.

இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பணி செய்யும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6வது நாளாக போராட்டம் நீடித்தது. சில தனியார் மருத்துவமனைகளும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இயங்கவில்லை.

இதனிடையே, எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஜூனியர் மருத்துவர்களை நேரில் சந்தித்த மம்தா பானர்ஜி, உடனே பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தினார். எனினும், மருத்துவர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், 'தங்களுக்கு நியாம் வேண்டும்' என குரல் எழுப்பி, போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

தொடர்ந்து, மம்தா தங்களை மிரட்டும் தொனியில் பேசியதாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவித்தனர். மம்தாவின் செயலை கண்டித்து 300க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் ராஜினாமா செய்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், மேற்கு வங்க மருத்துவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு மாநில மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், இது தேசிய போராட்டமாக மாறியது.

இதையடுத்து, மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு மம்தா அழைப்பு விடுத்தார். ஆனால், முதல்வர் என்ஆர்எஸ் மருத்துவமனைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மருத்துவர்கள் நிபந்தனை விதித்தனர்.

இந்நிலையில், மேற்குவங்க மருத்துவர்களுக்கு ஆதரவாக இன்று இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பாக நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை அறிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டிருக்கும், அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல், திறந்திருக்கும், எனினும், மருத்துவர்களின் வருகை குறைவால், அந்த சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ‘மருத்துவர்கள் போராட்டத்தை கவுரவ பிரச்னையாக்காதீர்கள், மாநிலத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டசபையில் தனியாக சட்டம் இயற்றுங்கள்' என்று மம்தா பானர்ஜிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

.