This Article is From Jan 12, 2019

அகிலேஷ் - மாயாவதி செய்தியாளர்கள் சந்திப்பு இன்று… காங்கிரஸுக்கு ‘கல்தாவா’..?

அகிலேஷும் மாயாவதியும் கடந்த சில வாரங்களாக நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மாயாவதியுடன் கூட்டணி வைப்பது மிகவும் முக்கியம் என்று அகிலேஷ் கருதுகிறார்.

Lucknow:

நாடாளுமன்றத் தேர்தலின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் மாநிலம் உத்தர பிரதேசம். அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி. இருவரும் பல காலமாக எதிரெதிர் அரசியல் முகாம்களில் இருந்து வந்தனர். ஆனால், வரும் மே மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் இணைந்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இன்று இருவரும் செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பு வெளியிடுவார்கள் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த இருவரும் இணைந்துள்ளதால், காங்கிரஸை கூட்டணியிலிருந்து கழட்டிவிட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 

காங்கிரஸுடுன் வரும் தேர்தலில் கூட்டணி இருக்குமா என்று அகிலேஷிடம் NDTV கேட்டதற்கு, ‘காங்கிரஸ், உத்தர பிரதேசத்தில் இரண்டு இடங்களில் மட்டும் எப்போதும் வெற்றி பெற்று வந்தது. அந்த இரு தொகுதிகளை வேண்டுமானால் நாங்கள் அவர்களுக்கு விட்டுக் கொடுப்போம்' என்று சூசகமாக பதில் அளித்தார். அவர் மேலும், ‘காங்கிரஸ் குறித்து நான் எந்த வித கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. முதலில் சமாஜ்வாடிக்கும் பகுஜன் சமாஜுக்கும் இடையில் தொகுதி பங்கீடு சுமூகமாக நடந்தாக வேண்டும்' என்று விளக்கினார். 

அகிலேஷின் இந்த தடாலடி கருத்து குறித்து காங்கிரஸ் தரப்பு, ‘நாங்கள் சில நேரங்களில் வீழ்த்தப்பட்டிருக்கலாம். ஆனால், எங்களை புறந்தள்ளுவது பெரும் விளைவுகளை உண்டாக்கும். அது எல்லோருக்கும் தெரிந்திருப்பதால், கண்டிப்பாக எங்களுக்குச் சாதகமாக நிலைமை மாறும்' என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. 

அகிலேஷும் மாயாவதியும் கடந்த சில வாரங்களாக நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ‘இருவரும் கூட்டணி குறித்து பேசி முடித்துவிட்டனர்' என்றுதான் யூகிக்கத் தோன்றுகிறது. 

மாயாவதியுடன் கூட்டணி வைப்பது மிகவும் முக்கியம் என்று அகிலேஷ் கருதுகிறார். ஏனென்றால் கடந்த முறை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 80 தொகுதிகளில் 73-ஐ பாஜக கைப்பற்றியது. 

மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாய் சோனியா காந்தி ஆகியோர் வென்ற அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் அகிலேஷ்-மாயாவதி தரப்பு வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

.