This Article is From Aug 08, 2019

சட்டப்பிரிவு 370 ரத்து: காஷ்மீர் மக்களிடம் அஜித் தோவால் கருத்துக்கேட்பு!

கடந்த திங்களன்று காஷ்மீர் சென்ற அஜித் தோவால், அங்குள்ள தற்போதைய நிலைமை குறித்து டெல்லிக்கு தகவல் அளித்து விருகிறார்.

பாரம்பரிய உணவான காஷ்மீரி வாஸ்வானை தோவால் உட்கொண்டார்.

New Delhi:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தும், காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எந்தவொரு பின்னடைவும் ஏற்படாமல் இருக்க அங்கு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூட்டப்பட்ட நிலையிலே இருந்து வருகிறது. இதனால், சாலைகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர்ந்து, இணையம், தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டதால் வெளியுலக தொடர்பு இல்லாமல் மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கும் நிலை காணப்பட்டது. 

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் மக்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறார். அந்தவகையில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதியில் அடைக்கப்பட்ட ஒரு கடைக்கு வெளியே, காஷ்மீரின் பாரம்பரிய உணவான வாஸ்வானை அவர் உண்டார். 

அப்போது, அங்கிருந்த மக்களிடம் கலந்துரையாடிய தோவால், எல்லாம் எப்படி செல்கிறது? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்புகிறார். இதற்கு கூட்டலிருந்த ஒருவர், எல்லாம் நல்ல படியாக செல்கிறது என்று பதிலளிக்கிறார். 

அதற்கு தோவால், ஆம், எல்லாம் சரியாகிவிடும். அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும். உங்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வே எங்களது ஒரே கவலை. உங்கள் தலைமுறையினரின் வளர்ச்சி மற்றும் நலனைப் பற்றி நாங்கள் சிந்திக்கிறோம் என்று அவர் கூறினார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடந்த ஞாயிறு இரவு முதல் காஷ்மீரில் 300க்கும் அதிகமான அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்டோரும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. 

சட்டப்பிரிவு 370வது ரத்து செய்வதற்கு முன்பு, காஷ்மீரில் கடந்த வாரத்தில் மட்டும் 40,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, பதற்றத்தை தவிர்க்க கேபிள்கள், தொலைபேசி, இணைய சேவைகள் அனைத்தும் அங்கு துண்டிக்கப்பட்டது. மூத்த அதிகாரிகள் அனைவரும் சேட்டிலைட் போன் மூலம் தொடர்பு கொண்டு வருகின்றனர். 

உள்ளூர் வாசிகள் அவசரம் குறித்த தகவலை நிரூபித்தால் மட்டுமே அவர்கள் வெளியில் நடமாட முடியும், மற்றபடி, அங்கு யாரும் வீட்டை வீட்டு வெளியே வர முடியாது. வெளிமாநிலத்தவர்கள் தங்கள் விமான டிக்கெட்டுகளை காட்டும் பட்சத்தில், ஸ்ரீநகரை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் நடமாட அனுமதிக்கப்படுகின்றனர். 

இதனிடையே, பக்ரித் பண்டிகை வருவதால், ஜம்மு-காஷ்மீரில் வரும் வெள்ளிக்கிழமையன்று மட்டும், சிறப்பு தொழுகைகள் மேற்கொள்ள கட்டுபாடுகள் தளர்த்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. 

.